
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், ஆணையர், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், ‘தமிழக முதல்வர் தமிழகத்திற்கான நிதி வாங்க டெல்லிக்கு செல்லவில்லை குடும்ப நிதி வாங்குவதற்காக சென்றிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து கேட்டதற்கு, “எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தவர். அவர் இப்படி கொச்சையாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை" என்று பதிலளித்தார்.
இதையடுத்து, ‘திமுகவின் ஆட்சி ஊழலுக்கான ஆட்சி. அதற்கான தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியாது’ என இபிஎஸ் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “ஆமாம்.. ஆமாம்.. கொடநாடு வழக்கு எங்கள் கையில்தான் உள்ளது..” என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
மேலும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக கழிவு நீர் கலந்துவிடுவது குறித்து கேட்டதற்கு, “அது குறித்தும் பேசி வருகிறோம். பாலாற்றில் கூட குப்பையை கொட்டுகிறார்கள். தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “வேலூர் மாநகராட்சியில் முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக வேலூர் மாநகராட்சி குப்பைகளை கொட்ட இடம் இல்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்தும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்” எனக் கூறினார்.