Advertisment

“மோடியின் பேச்சு காந்தி மீது உள்ள வஞ்சகத்தைக் காட்டுகிறது” - துரைமுருகன்

Duraimurugan comments on Modi

Advertisment

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தத் தேர்தலில் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மோடி 20 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தவர் பத்தாண்டு காலம் மாபெரும் பதவி வகித்தவர். அவருக்கு அரசியல் சட்ட திட்டங்கள் நன்கு தெரியும். மற்றவர்களுக்கும் பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

அதிலே ஒன்றுதான் இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேலையில் ஒருவித மறைமுகமான இன்புளுயன்ஸ் (influence) ஏற்கக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால்தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையைத்தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் ரஜக துரக படைகளோடு கன்னியாகுமாரிக்கு வந்து தடை உத்தரவுபோட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பாக்கலை. காந்தி குஜராத்தைச் சேர்ந்தவர், அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது அதைக் கூட பார்த்திருக்க மாட்டாரா? காந்தி பற்றித்தெரியாதா? அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்ஜகம் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அதனுடைய அடையாளம்தான் காந்தியை சுட்டதன் வெளிப்பாடு. இந்திய தியாகிகளைநாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது ஆளுனர்தான். ஒரு விழாவுக்கு நாங்கள் ஆளுனர் மாளிகைக்கு போயிருந்த போது ஆளுனர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை அதை மறைத்தவர் ஆளுனர். இந்நிலையில் இதைப் பற்றி பேச அவர்களுக்கு யோகியதை இல்லை. அவரும் சட்டமரபைமீறுகிறார். இப்படியான நிலை நீடிக்குமானால் நாட்டில் ஜனநாயகம் கேலி கூத்தாகும்.

Advertisment

முல்லை பெரியாரில் தமிழக அதிகாரிகள் பயணிக்க தமிழன்னை படகு 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது குறித்து கேட்டதற்கு, அதில் ஏதே பழுது உள்ளது எனச் சொல்கிறார்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அணைக் கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, DPR தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆகையால் கண்காணிப்பு குழுவுக்கோ, காவேரி மேலாண்மை வாரியத்தூக்கோ, மத்திய நீர்வளத்துறைக்கோ அல்லது மத்திய அரசுக்கு என யாருக்கு வேண்டுமானாலும் மனு கொடுக்கலாம். அவர்கள் தமிழகத்தின் ஒப்புதல் உள்ளதா எனக் கேள்வி எழுப்புவார்கள். ஒப்புதல் இல்லை என்று சொன்னால் அந்த மனுக்களை நிராகரித்து விடுவார்கள். இவர்கள் வேண்டுமானல் அரசியலுக்காக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மதிக்காமல் நடந்தது போல நடந்து கொள்ளலாம்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பைமீற முடியாது. ஆக இது அரசியல். நானும் 75 ஆண்டுகளாக இந்தத்துறையைப் பார்க்கிறேன் வருகிற மந்திரி எல்லாம் நாங்கள் கட்டியேதீருவோம் எனச் சொல்வது இது போன்ற வீர வசனங்களை எல்லாம் நான் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அந்த வயதையும் நான் கடந்து விட்டேன். ஆக கர்நாடகாவானாலும், சிலந்தி ஆறு ஆனாலும், முல்லை பெரியாறு ஆனாலும், மேகதாது ஆனாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றியும், நம்முடைய ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல் கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று அமிக்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, ஒடிசா அப்போதைய கலிங்கம்தானே, ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள் சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம்தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. இப்போது என்ன ஒடிசாவில் ஒரு தமிழர் செல்வாக்கோடு உள்ளார். அதில் என்ன பிரச்சனை? இங்கு எத்தனை வடமாநிலத்தார் அதே போன்று செல்வாக்கோடு உள்ளார்கள்” என நீர்வளத் துறை அமைச்சர் கூறினார்.

duraimurgan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe