Skip to main content

“நிலைமை விபரீதமாகும்” - ஒன்றிய அரசை எச்சரிக்கும் துரை வைகோ

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 Durai Vaiko  speech in trichy

 

காவிரி உரிமை பிரச்சனையில் தமிழர் உரிமை காக்கப்பட வேண்டும் என்று கூறி ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் மதிமுகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரை வைகோ, “காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தஞ்சை மண்டலம் தான் தரணிக்கே சோறு போடுகின்றது. எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்திய சோலையாக காட்சி தரும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் நிலை என்ன? தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் அவல நிலையில் இருக்கிறது.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 இலட்சம் ஏக்கராக இருந்த பாசன பரப்பு  தற்போது 15 இலட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. பாதிக்கு பாதி நிலம் மட்டுமல்ல. பாதிக்கும் மேற்பட்ட மக்களும் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கர்நாடகாவில், முன்பு இருந்ததை விட தற்போது விவசாய பாசனப் பரப்பு 4 மடங்காகக் கூடிவிட்டது. 

 

'நடந்தாய் வாழி காவேரி' என்கிறது சிலப்பதிகாரம். காவிரியில் தண்ணீர் நடந்து அல்ல, தவழ்ந்து கூட வரவில்லை. இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைக் கண்டிக்கிறேன்.

 

கர்நாடகாவில், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக்கூடாது எனப் போராடும் பாஜகவையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கண்டிக்கிறேன். காவிரியில் தமிழகத்திற்கு உரிமையான நீரைப் பெறுவதற்கு நாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகப் போராடி வந்திருக்கிறோம். நீண்ட காலம் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். பல உயிரிழப்புகளை சந்தித்து இருக்கிறோம். உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடியும் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடகம் மதிப்பது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் சொல்வதையும் கர்நாடகம் பொருட்படுத்துவது இல்லை.

 

மழைக் காலங்களில் கர்நாடக மாநிலத்தில் எல்லா அணைகளும் நிரம்பிய பிறகு, எஞ்சிய உபரி நீரை மட்டுமே காவிரியில் திறந்து விடுகிறார்கள். வெள்ளப் பெருக்கு காலங்களில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவிரியை ஒரு வடிகாலாக கர்நாடக அரசு பயன்படுத்தி வருகின்றது. வெள்ளம் வரும்போது, அணைகள் நிரம்பும் போது தண்ணீரைத் திறந்து விடுவது பெரிய விசயம் அல்ல. வறட்சி காலங்களில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். 

 

அந்தந்த மாநில நதிகள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தமானவை என நீங்கள் கருதினால். நீங்கள் தண்ணீர் தர மறுத்தால், ஒன்றிய அரசு அதை கைக்கட்டி வேடிக்கை பார்க்குமானால் நிலைமை விபரீதமாகும். 

 

காவிரி விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் தமிழக அரசைக் குற்றம் சாட்டி, தமிழ்நாட்டின் ஏழை விவசாயிகளின் பிரச்சனையில் அரசியல் செய்து வருகின்றார்கள். ஒன்றிய பாஜகவையோ, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாஜக கட்சியையோ அவர்கள் ஒருநாளும் விமர்சிப்பது இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்