Skip to main content

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய துரை வைகோ!

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Durai Vaiko rescued the old woman who was involved in the accident

 

திருச்சி துவாக்குடி அருகே உள்ள பரக்கத் நகரைச் சேர்ந்தவர் நூர்ஜகான்(70). இவர் அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று நூர்ஜகானை மோதியதில் படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். ஆனாலும் நூர்ஜகானை மோதிய கார், நிற்காமல் சென்றது. 

 

இந்த நிலையில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வழியாகத் திருநெல்வேலிக்குச் செல்வதற்காகக் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது துவாக்குடி பேருந்து நிறுத்தம் அருகே மக்கள் கூட்டமாக நின்றதைக் கவனித்த துரை வைகோ, காரை ஓரமாக நிறுத்திவிட்டு மக்கள் கூட்டத்தை நோக்கிச் சென்று பார்த்தபோது, நூர்ஜகான் படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளார். உடனே தன்னுடன் வந்த மதிமுக நிர்வாகிகளை அழைத்து 108 ஆம்புலன்ஸ்குக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் ஏற்றி நூர்ஜகானை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு துரை வைகோ அங்கிருந்து சென்றார்.  

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நூர்ஜகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே நூர்ஜகானை மோதிய காரை துவாக்குடி அண்ணா வளைவு பகுதி அருகே போலீசார் மடக்கிப் பிடித்து காரை ஓட்டி வந்த அன்புச்செல்வனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Central government allowed Santhan to go to Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 2022 நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தங்களை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இத்தகைய சூழலில் சாந்தன் தன்னை இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதே சமயம், “கடந்த 32 ஆண்டுகளாக தனது தாயை பார்க்கவில்லை. அவரது முதுமைக் காலத்தில் கூட இருந்து வாழ விரும்புகிறேன். தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில், “சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன் வரும் 26 அல்லது 27 ஆம் தேதி இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துரை வைகோ நேரில் ஆறுதல் 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலைவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மேலும், “திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமுத்தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் இறந்துவிட்டனர். வெடி விபத்து நடைபெற்ற அன்று, மாவட்ட ஆட்சியரும், சாத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமனும் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மூன்று இலட்ச ரூபாய் நிவாரண உதவியினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனும் வழங்கி இருக்கிறார்கள். பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் தலா ஐந்து இலட்ச ரூபாய் இழப்பீட்டு நிவாரணமாக வழங்கி உள்ளார்கள்.

ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அந்த நிவாரணத் தொகை இன்று வரை வந்து சேரவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடம் முறையிட்டனர். அதனை விரைவாக வழங்கிட முன்வர வேண்டும் என்று ஒன்றிய அரசைக் வலியுறுத்துகிறேன். மேலும் திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்.

ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகளைத் தயாரித்ததன் விளைவாகத்தான் விபத்து நிகழ்ந்தது என்று எழுந்த புகாரின் பெயரில் வருவாய் துறை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தயாரிப்புத் தொழிலில் உயிரிழப்புகள் நேராவண்ணம் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.

தவிர, 9 இலட்சத்து 85 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 30 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் தமிழக அரசு, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் தொழில் பேட்டைகளை உருவாக்கி பல்வேறு தொழில்களைத் தொடங்கி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.