Durai Vaiko condemns the ban on Tamil songs on All India Radio

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் தமிழ் திரைப்படப் பாடல்கள் நிறுத்தபட்டு இந்தி பாடல் ஒலிபரப்பபடுவது தமிழ் நேரயர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய வானொலி (AIR) பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு நான் கண்டனம் தெரிவிக்கின்றேன்.

Advertisment

அதிகாலை 5:50 முதல் இரவு 11 மணி வரை தமிழிலும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5:50 வரை ஹிந்தியிலும் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இது மறைமுக ஹிந்தி திணிப்பின் செயல்பாடாகவே நான் கருதுகிறேன். சென்னை பண்பலை எண் 101.4 ஒலிபரப்பு 02.07.2024 அன்றிலிருந்தும், திருச்சி பண்பலை 102.1 ஒலிபரப்பு 09.04.2025 இல் இருந்தும் இரவில் ஹிந்தி ஒலிப்பரப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இது டெல்லியிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.

விளம்பர வருமானம் இல்லாத குமரி FM ல் 24/7 தமிழ் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஹிந்திக்கு மாற்றுவது ஏற்புடையது அல்ல. இதை இப்படியே தொடர அனுமதித்தால் அனைத்து பண்பலையும் முழு நேரமும் ஹிந்தி ஒலிபரப்பிற்கு மாற்றப்பட்டுவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒன்றிய அரசு மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, உடனே திருச்சி மற்றும் சென்னை வானொலியில் முழு நேர தமிழ் ஒலிபரப்பை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.