/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3789.jpg)
ஆன்லைன் சூதாட்ட தடை செய்யும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நேற்று (21.3.2023) நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் குறித்துதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ‘ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அட்டவணை7 இல், பட்டியல் 2 இல், 34ன் படி மாநில அரசுக்கு உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.
'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர், ரம்மி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய நிலையில், ஒன்றிய அரசின் இந்த பதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலையை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து, கடனாளியாகி மன உளைச்சலுக்கு உள்ளாகி இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே இந்த சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று மனநல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது மற்றும் முறைப்படுத்துவது குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் இயற்றப்பட்டு, செப்டம்பர் 26 அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இந்த அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 17 ஆம் நாள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 19 ஆம் நாள் ஆளுநர் இசைவுக்காக அனுப்பப்பட்டது. இதில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
'Public Order, Public Health, Theaters and Dramatic performances என்ற பிரிவுகளின்படிதான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றுகடந்த நவம்பர் 24 ஆம் நாள் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த பின்னரும் ஆளுநர் 'கிடப்பில்' போட்டிருந்தார். ஏற்கனவே 03.08.2022 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மகாபாலி சிங்கின்ஆன்லைன் சூதாட்டதடை குறித்த கேள்விக்கு, அப்போதைய ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், 'எல்லா வகையானசூதாட்டங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 7 உட்பிரிவு 2ன் கீழ் மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘Information and Technology (IT) Act 2000’ சட்டத்தில் இந்த சூதாட்ட விளையாட்டுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. சூதாட்ட விளையாட்டுகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை.இவை Police and Public Order என்பதன் கீழ் வருவதால் அவை மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது' என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உரிய விளக்கம் கொடுத்த பின்பும், ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெளிவான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் அளித்த பின்பும், இப்போது 5 மாதங்களுக்குப் பிறகு 'மத்திய அரசின் கீழ்வரும் விவகாரத்தில் மாநில அரசு எப்படி சட்டம் இயற்றலாம்' என்று கேள்வி எழுப்பி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர்.
நமது தலைவர் வைகோவும் இந்த ஆன்லைன் சட்டம் குறித்த கேள்விகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி அதற்கான விடை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை ஒன்றிய அமைச்சர்அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ள விளக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநர், மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக, மத சக்திகளுக்கு துணை போகும் வகையில் செயல்பட்டு அந்த பதவிக்கு இழிவை ஏற்படுத்தியுடன் அந்த பதவியில் நீடிக்க தகுதி இழந்தவராகிறார்.
இது போன்று தெலுங்கானாமாநில ஆளுநர், மாநில அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்து, தெலுங்கானா அரசு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. உச்சநீதிமன்றமும் இது குறித்து ஒன்றிய அரசுக்கு விளக்கம் கேட்பதாக கூறியுள்ளது. இதே போன்று தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, தமிழ்நாடு ஆளுநரின் தமிழ்நாட்டு மக்கள் விரோதப் போக்கிற்கும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)