Advertisment

“நிதிஷ், நாயுடு பட்ஜெட் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்”- துரை வைகோ தாக்கு

Durai vaiko also condemned Tamil Nadu's boycott of the Union Budget

Advertisment

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். அதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகொ, “இந்திய அரசியலமைப்பு இந்தியாவை மதச்சார்பற்ற, சோசலிச, இறையாண்மை மற்றும் ஜனநாயகக் குடியரசு என்று தெளிவாக உறுதிப்படுத்துகின்றது. அதன் குடிமக்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சம நீதி பெறுவதை உறுதி செய்கின்றது. கூட்டாட்சி என்பது நமது குடியரசின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இது நம்மைப் போன்ற பன்முக கலாச்சாரத்தில் பன்முகத்தன்மை, அமைதி மற்றும் பரஸ்பரத்தை உறுதி செய்கின்றது. எவ்வாறாயினும், ஒன்றிய அரசும், பட்ஜெட்டும் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களைக் கைவிட்டுவிட்டன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.87% பங்களிப்பதோடு, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10% பங்களிப்பையும் அளித்து, நமது நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருந்தாலும், ஒன்றிய பட்ஜெட்டில் எங்கள் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் எங்களது மாநிலம் கிட்டத்தட்ட 6% ஆக இருந்தாலும், ஒன்றிய வரிகளின் மொத்தத் தொகுப்பில் தமிழகத்தின் பங்கு வெறும் 4% ஆகக் குறைந்துள்ளது. ரூபாய் 37,907 கோடி வெள்ள நிவாரணம் கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முறை கடிதங்கள் அனுப்பிய நிலையில், அதுவும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும் வெறும் ரூ.276 கோடியை மட்டுமே மத்திய அரசு தந்துள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட ஒன்றிய அரசு, பிற மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

Advertisment

இதற்குக் காரணம் தமிழ்நாடு தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் தேசம் என்பதனாலா? தமிழகம் கோட்சே மற்றும் சாவர்க்கரின் போதனைகளைப் பின்பற்றாமல் மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கரின் போதனைகளைப் பின்பற்றுகிறது என்பதாலா? இந்த யூனியன் பட்ஜெட்டில் எம்.ஆர்.டி.எஸ் மற்றும் மெட்ரோ திட்டங்களுக்கு ரூபாய் 24,932 கோடி ஒதுக்கப்பட்டாலும், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டம், மதுரை மற்றும் கோவையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ திட்டங்கள் பற்றி குறிப்பிடப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கான செலவு ரூ.63,000 கோடியில், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் 21,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை. தமிழகம், பாஜகவிற்கு ஒரு இடம் கூட தராதது இதற்குக் காரணமா? எங்களது மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடியவில்லை. திருச்சி மெட்ரோவிற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகம் வெறுப்பு அரசியலில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் இதற்குக் காரணமா?

தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையின் ஒரு பகுதி 2012-13 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யப்பட்டு அனுமதியளிக்கப்பட்டு 2018-19 வரை ரயில்வேயின் பிங்க் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போல, சென்னை நகருக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான தாம்பரம் - செங்கல்பட்டு உயர்மட்ட விரைவுச்சாலையும் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பிரித்தாளும் அரசியலில் நம்பிக்கை இல்லை என்பதுதான் இதற்குக் காரணமா?

ஒன்றிய பட்ஜெட் தமிழகத்தை புறக்கணித்தது மட்டுமின்றி நமது நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் பெண்களின் நலன்களையும் புறக்கணித்துள்ளது. நம் நாட்டில் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் பிளவு என்பது கவலை அளிக்கக்கூடியது மற்றும் வெட்கக்கேடானது ஆகும். நமது மக்கள் தொகையில் 10% பேர் நமது நாட்டின் 77% செல்வத்தை வைத்துள்ளனர். ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் MSME துறையின் இழப்பில் பெரும் லாபம் ஈட்டியுள்ளன. ஒரு கோடீஸ்வரர் தனது குடும்பத்தின் திருமணத்திற்காக ரூ.5000 கோடி செலவிடுகிறார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயக் கடன்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் சூத்திரமான C2+50% அடிப்படையில் MSP-க்கான உத்தரவாதத்தை சட்டப்பூர்வமாக்க இந்த பட்ஜெட் தவறிவிட்டது. 2020-21 காலகட்டத்தில் விவசாயப் போராட்டங்களில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், மற்ற விவசாயிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் இந்த பட்ஜெட் தவறிவிட்டது. விதைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற பண்ணை இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படவில்லை. பூச்சிக்கொல்லி மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மொத்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடு 2019 ஆண்டில் இருந்த 5.4% இல் இருந்து தற்போது 3.15% ஆக தொடர்ந்து குறைந்து வருகிறது.

யூனியன் பட்ஜெட்டில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் நலத்திட்டங்கள் 1.16% லிருந்து 0.13% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொது சுகாதாரச் செலவீனத்தை 5205 கோடியிலிருந்து 3510 கோடியாக 32.5% குறைத்துள்ளது. இந்த அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் நலன்களைக் கைவிட்டதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்த அரசாங்கத்தின் 'எல்லாம் நன்றாக இருக்கிறது' என்ற கதைக்கு முற்றிலும் மாறாக, வேலையின்மை விகிதம் மற்றும் பணவீக்கம் - நாட்டின் பொருளாதாரத்தின் உண்மையான அளவுகோல் மிகவும் மோசமான படத்தை சித்தரிக்கின்றன.

வேலையின்மை விகிதம் எப்போதும் இல்லாத அளவிற்கு 9.2% ஆகவும், உணவுப் பணவீக்கம் 10% -ஐயும் தாண்டியுள்ளது. இந்தியா உலகப் பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் 111 வது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, இந்த அரசு இந்திய இளைஞர்கள் மீது அன்பு செலுத்துவதாக வார்த்தை ஜாலம் காட்டுகிறதே தவிர உண்மையான அக்கறையை அவர்கள் மீது கொண்டிருக்கவில்லை. அதிகரித்து வரும் கல்விக் கடன்கள், வேலையின்மை மற்றும் தவறான கல்வி முறை ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மேலும், வினாத்தாள் கசிவு போன்ற மோசடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்ஜெட்டில் இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புக்கு லட்சக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்புகள் அனைத்தும், 2016-ம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பொய்யான வாக்குறுதிகளை போல தான் உள்ளது. இந்த பட்ஜெட் விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் அல்ல என்று கூறி எனது உரையை முடிக்க விரும்புகிறேன். இந்த அரசாங்கம் அதன் கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தவே இந்த பட்ஜெட்டை வடிவமைத்து உள்ளது. ஆகவே இதனை நிதிஷ் - நாயுடு பட்ஜெட் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

இது முதலாளித்துவத்திற்கு உதவும் பட்ஜெட். சமத்துவம் மற்றும் சமூகநீதி என்ற அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான பட்ஜெட் இது. அம்பேத்கரின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பட்ஜெட் இது. ஒன்றிய அரசு அரசியல் எல்லைகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து சாமானியர்களுக்கும், இந்த மகத்தான நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று உரையாற்றினார்.

mdmk parliment budget
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe