/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1_540.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தெங்குமரஹாடா மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தை சென்றடைய மாயாற்றை கடக்க வேண்டும். மலைக்கிராமத்தில் வசிக்கும் வியாபாரிகள், பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சத்தியமங்கலம் வந்து செல்வது வழக்கம். மழைக்காலங்களில் மாயாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்தச் சமயம் ஆபத்தை உணராமல் பரிசலில் மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கோவை, நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாயாற்றில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று(17.7.2024) காலை மாயாற்றில் 10 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று(18.7.2024) காலை 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டப்படி நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் இன்று 2-வது நாளாக மாயாற்றில் பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பரிசலை முற்றிலும் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 2-வது நாளாக கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் முடங்கி போய் உள்ளனர். இதனால் தெங்குமரஹாடா, அல்லி மாயார் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)