Skip to main content

துபாயில் கணவனுக்கு உடல்நல பாதிப்பு... கணவனை மீட்க போராடும் மனைவி... 

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
Cuddalore District Tittakudi

 

துபாயில் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வரும் கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வருகிறார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை.

 

பாலகிருஷ்ணன் 2007ஆம் ஆண்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு சார்ஜாவில் உள்ள ரான்ஜஸ் பில்டிங் கன்சக்சன் என்ற நிறுவனத்தில் கட்டுமான துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொபைலில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் அவர் போன் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர் வேலை செய்த கம்பெனியிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

 

இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் பாலகிருஷ்ணன் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்ர்ப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தொலைபேசி மூலம் அவரது மனைவியிடம் கூறியுள்ளனர். இப்போது அவரது நிலைமை மிகவும் சீரியஸாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியும் தனது கணவரை தமிழகம் கொண்டுவந்து இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிடலாம் என்று பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களிடம் தனது குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

 

அவரது கணவர் குறித்து அவரிடம் நாம் கேட்டபோது, ஏற்கனவே எனது கணவருக்கு தலையில் ஏதோ கட்டி இருப்பதாகவும் அதை சரி செய்வதற்காக நமது ஊருக்கு வந்து இங்குள்ள மருத்துவமனைகள் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்படுவதற்காக பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்துள்ளார்.

 

ggg

 

இந்திய தூதரகத்தில் தனது உடல்நிலையை பற்றி எழுத்துமூலம் முறையாக விண்ணப்பித்து காத்துக்கிடந்துள்ளார். இந்த கரோனா பரவல் காரணமாக அவரை ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதப்படுத்தி உள்ளனர். இந்த கால தாமதம் அவருக்கு ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. வேலையில் இருந்த போதே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இன்னும் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். நமது தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு எனது கணவரை உடனடியாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளேன். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 

அவர் வேலை செய்த கன்சக்ஷன் கம்பெனியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் பொறுப்போடு எந்த பதிலும் சொல்லவில்லை. என் கணவருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பதில் கூறுகின்றனர். எனவே எனது கணவரின் நிலைமை அங்கு எப்படி உள்ளது. அவர் இங்கு கொண்டு வருவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்காக  நானும் எனது நான்கு பிள்ளைகளும் காத்திருக்கிறோம் என்றார்  கலங்கிய கண்களுடன் அஞ்சலை.

 

பாலகிருஷ்ணன் ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி மூலம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி பிரசவத்தின்போது இறந்து போய் உள்ளார். அதன் பிறகு இரண்டாவது மனைவியாக அஞ்சலை என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஞ்சலை நான்கு குழந்தைகளும் பாலகிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருக்கின்றனர். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக அவரது நண்பர்கள் மூலம் அங்கிருந்து வரும்தகவல்கள் அவரது குடும்பத்தினரை கலக்கமடைய வைத்துள்ளது.

 

பாலகிருஷ்ணனின் மனைவி அவரது  நான்கு பிள்ளைகள் பரிதவித்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் இந்திய தூதரகம் பாலகிருஷ்ணன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் வடகராம் பூண்டி கிராம மக்களும் அவரது குடும்பத்தினர்களும். பாலகிருஷ்ணன் போன்று அயல்நாடுகளில் வெவ்வேறு உடல்நல பாதிப்புகளில் அவஸ்தைப்படும் தமிழர்களை விரைந்து தமிழகம் கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பைப்லைன் அமைத்ததை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர், பெரங்கியம், தி.ஏந்தல் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில், விவசாய நிலங்களில் 8 அடி ஆழத்தில் குழாய்கள் அமைத்து சென்னையிலிருந்து மதுரைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் சென்றனர். அப்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மிகவும் குறைவாக வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தியடைந்தனர். 

 

இந்நிலையில், தற்போது சென்னை எண்ணூரிலிருந்து, தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச்செல்ல குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்திலுள்ள அரங்கூர், பெரங்கியம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் 60 அடி அகலத்திற்கு சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து, பாதை அமைக்கும் பணி 27-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். 

 

அதையடுத்து நேற்று (28.09.2020) அரங்கூர் கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பைப்லைன் பிரிவு உதவி மேலாளர் கிருஷ்ணா கிராம நிர்வாக அலுவலர் வினோத்குட்டிகண்ணா முன்னிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகள் ராஜேந்திரன், பச்சமுத்து ஆகியோர், 'ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்து பயிர் வைத்துள்ளோம். இந்த நேரத்தில் பயிர்களை அழித்து பைப்லைன் அமைப்பதால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே அறுவடை காலத்திற்குப் பின் பணிகளைத் தொடரவேண்டும். இல்லையெனில் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கிய பின் பணிகளைத் துவக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர்.

 

Ad

 

ஆனாலும்,  நஷ்டஈடு எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தையில் உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தியடைந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

தொடர்ந்து விவசாயிகளின் நிலம் மற்றும் பயிருக்கு உரிய நஷ்டஈடு வழங்க உயர் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தினர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

 

 

 

Next Story

பொது நல இயக்கத்தினரையும் ஊராட்சி மன்ற தலைவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்த அரசு அதிகாரியை கண்டித்து தர்ணா போராட்டம்...

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
t

 

 

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருப்பவர் சங்கர். இவரை கண்டித்து மக்கள் பாதை இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், இப்படி பல்வேறு அமைப்பினர் சேர்ந்து 26-ம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். 

 


மங்களூர் ஒன்றிய ஆணையரை கண்டித்து ஏன் இந்த போராட்டம் என்று அவர்களிடம் நாம் கேட்டபோது, மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஒன்றியத்தின் மூலம் நடைபெறும் திட்டப் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் மோசடிகள் நடந்து வருகின்றது. இது குறித்து வாட்ஸ் அப் குழுக்களில் மேற்படி இயக்கத்தினர் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்து வந்துள்ளனர். இதை மங்களூர் ஒன்றிய ஆணையர் சங்கர் வாட்ஸ் அப் குழுக்களில் வரும் தகவல்களை பார்த்துள்ளார். இதையடுத்து மேற்படி இயக்கத்தினருடன் விவாதித்துள்ளார். அப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராமநத்தம் கோவிந்தசாமி, மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த புதுக்குளம் ரமேஷ் ஆகியோரை ஆணையர் சங்கர் ராம நத்தத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கு கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு நீங்கள் வாருங்கள், நீங்கள் சுட்டிக்காட்டும்  பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தயார், நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் தர தயாராக இருக்கிறேன் இந்த விவாதத்திற்கு நான் தயார் என்று சவால்விட்டு அழைத்துள்ளார்.

 

அதை ஏற்று கோவிந்தசாமியும் ரமேஷும் ஆணையர் கூறியபடி ராமநத்தம் சமுதாய கூடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கே கரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி வந்தார். இந்தக் கூட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள், மகன்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக சென்று அரசு நிகழ்ச்சிகள், திட்டப்பணிகள் குறித்து ஆய்வுகள், ஊராட்சி நடத்தும் கூட்டங்கள் அனைத்திலும் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் உறவினர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 

ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சங்கர் பெண் தலைவர்களின் கணவர்களையும் அவர்களது மகன்களையும் வைத்து கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டம் முடிந்ததும், தலைவர்கள் கிளம்பி வெளியே வந்துள்ளனர். 

 

அப்போது கோவிந்தசாமி, ரமேஷ் ஆகிய இருவரும் ஆணையர் சங்கரை சந்தித்து, 'எங்களை  அழைத்துள்ளதை ஏற்று இங்கு வந்துள்ளோம்' என்று கூறியுள்ளனர். உடனே ஆணையர் சங்கர் வெளியே சென்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்து அமர வைத்துள்ளார். அப்போது கோவிந்தசாமி ரமேஷ் இருவரும், தாங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தாங்கள் தான் பதில் கூறுவதாக கூறி உள்ளீர்கள். அப்படி இருக்கும்போது ஊராட்சி மன்றத் தலைவர்களை இங்கு ஏன் திரும்ப அழைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

 

அதற்கு ஆணையர் சங்கர், நாம் விவாதிக்கும் போது அவர்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள் என்று கூறியுள்ளார். சரி என்று கோவிந்தசாமி, ரமேஷ் இருவரும் ஆணையரிடம் கிராம பணிகள் குறித்து கேள்விகளை கேட்டதும், ஆணையர் சங்கர் மௌனமாக இருக்க, ஊராட்சிமன்றத் தலைவர்கள் ரமேஷ், கோவிந்தசாமி ஆகியோரிடம் எங்கள் கிராம பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்பதற்கு நீங்கள் யாரென்று தகராறு செய்ய ஆரம்பித்தனர். 

 

tttt

 

அப்போது சத்தமில்லாமல் ஆணையர் சங்கர், தனது அலுவலக வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். ஊராட்சி மன்றத் தலைவர்கள், சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோவிந்தசாமி, மக்கள் பாதை இயக்கம் ரமேஷ் ஆகியோருக்கும் இடையில் திட்டமிட்டு தகராறு மூட்டி விட்டு விட்டு ஆணையர் சங்கர் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் தலைவர்களிடம் சிக்கிக் கொண்டனர். உங்களிடம் விவாதிக்க நாங்கள் வரவில்லை. அதிகாரி அழைத்ததால் வந்தோம் என்று காரசாரமாகப் பேசி விட்டு வெளியே வந்துள்ளனர். பெரும் தகராறு ஏற்படும் சூழ்நிலை அப்போது ஏற்பட்டுள்ளது.

 

மக்கள் பிரச்சினைகளை, அரசின் கிராமப்புற திட்டங்களை முறையாக செய்ய வேண்டும். ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்க சென்ற எங்களை ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஏவி விட்டு எங்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்த ஆணையர் சங்கர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காகவே தான் இந்த முற்றுகைப் போராட்டம் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட சட்ட பஞ்சாயத்து இயக்க கோவிந்தசாமி, மக்கள் பாதை இயக்கம் ரமேஷ் சிறு குறு விவசாயிகள் சங்கத்தலைவர் தயா பேரின்பன் ஆகியோர் நம்மிடம் கூறினார்கள்.

 

தர்ணா போராட்டம் நடத்தியவர்களிடம் திட்டக்குடி காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தை நடத்தியவர்கள் திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரை சந்தித்து ஆணையர் சங்கர் குறித்து புகார் மனு அளித்துள்ளனர். வட்டாட்சியர்கள் இருவரும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

tt51251235

 

மக்கள் பாதை இயக்க ரமேஷ், சட்ட பஞ்சாயத்து இயக்க கோவிந்தசாமி மற்றும் பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தின் போது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆணையர் சங்கரிடம் கேட்டோம். பல இயக்கத்தின் பெயர்களை சொல்லி சிலர் அரசு திட்ட பணிகள் நடப்பதில் முறைகேடுகள் என பொய்யாகக் கூறி மிரட்டி கமிஷன் கேட்கிறார்கள். மேற்படி நபர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தலைவர்கள் பதில் கூறட்டும் என்றுதான் அவர்களை வரவழைத்தேன். மற்றபடி அவர்கள் கூறுவது போன்று ஒன்றிய திட்டப்பணிகளில் தவறுகள் ஏதும் நடக்கவில்லை. இந்த ஒன்றியத்தில் பல்வேறு இயக்கத்தை கூறி ஊராட்சிமன்ற தலைவர்களிடமும் ஒன்றிய அலுவலர்களிடமும் திட்டப் பணிகளில் குறை இருப்பதாகக் கூறி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டினார் சங்கர்.

 

இது குறித்து மக்கள் பாதை இயக்க ரமேஷ், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோவிந்தசாமி ஆகியோர் நம்மிடம், நாங்கள் தவறு செய்திருந்தால் காவல்துறையில் புகார் கூறி எங்கள்மீது நடவடிக்கை  எடுக்க சொல்லியிருக்கலாம் அல்லவா. அப்படிப்பட்ட இயக்கம் எங்களுடையது அல்ல. நாங்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற கொள்கையோடு மக்களுக்காக பணி செய்து வருகிறோம். ஒன்றிய பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள், ஊராட்சி கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்காத பல  ஊராட்சிகள் உள்ளன. அதன் சட்டதிட்டங்களை யாரும் செயல்படுவதில்லை. அதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதுபோன்று பல்வேறு தகவல் குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் சங்கர் எங்களிடம் விவாதம் நடத்துவதாக வரவழைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தூண்டிவிட்டு மோதவிட்டு பார்க்கிறார். இவரிடம் மட்டுமல்ல வேறு எந்தஉயர்  அதிகாரியிடமும் நேருக்குநேர் விவாதிக்கத் தயார். அவர்கள் எங்களுக்கு பதில் கூறட்டும். எங்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்க ஊராட்சி மன்றத் தலைவர்கள் தூண்டிவிட்டு மோத பார்க்கிறார்கள். தகுந்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தவறு செய்த அதிகாரிகள் தண்டனை பெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க உள்ளோம் என்றார்கள் மக்கள் பாதை இயக்க ரமேஷ் சட்ட பஞ்சாயத்து இயக்க கோவிந்தசாமி ஆகிய இருவரும்.