Skip to main content

சசிகலாவிடம் நோட்டீஸ் அளித்த டி.எஸ்.பி. மீது நடவடிக்கை கோரி வழக்கு!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

DSP who issued notice to Sasikala  to remove admk flag in her car

 

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி, தமிழகம் திரும்பிய சசிகலாவை வழிமறித்து, அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து கிளம்பி தமிழகம் வந்தார். அவரை வரவேற்பதற்காக, அ.ம.மு.க. கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச் செயலாளர் அறிவழகன் காவல்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.

 

இதைப் பரிசீலித்த காவல்துறையினர், அதிமுக கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதியளித்தனர்.

 

இதுதொடர்பான நோட்டீஸை, அனுமதி கோரிய அறிவழகனிடம் கொடுக்காமல், தமிழக எல்லைக்குள் வந்த சசிகலாவிடம், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணன் கொடுத்தார்.

 

அறிவழகன் அளித்த விண்ணப்பத்தின் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவரிடம் கொடுக்காமல், சசிகலாவிடம் கொடுத்து அவரை வரவேற்கத் திரண்டிருந்த தொண்டர்கள் இடையே பதற்ற நிலையை உருவாக்கியதால், காவல்துறை விதிகளை மீறிய டி.எஸ்.பி. சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி,  வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்