மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி.யாக பதவி வகித்து வருபவர் சுந்தரேசன். இவர் தனது அரசு வாகனம் காவல் துறையால் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திரும்பப் பெற்றதாகக் கூறி நேற்று (17.07.2025) காலை தனது வீட்டிலிருந்து அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும்  ஊடகங்களில் வெளியானது. அதே சமயம்  இந்த விவகாரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையோ டி.எஸ்.பி.யின் வாகனம் பழுது காரணமாகச் சரி செய்ய எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாற்று வாகனம் வழங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்திருந்தது.

இதனையடுத்து டி.எஸ்.பி. சுந்தரேசன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கிற அனைத்து காவலர்கள், அதிகாரிகள் எல்லாருக்கும் தெரியும். இங்கே என்ன கொடுமை நடந்துகிட்டு இருக்கிறது என்று. இதற்குக் காரணம் ஒருவர் எஸ்.பி. ஸ்டாலின், இன்னொருவர் ஆய்வாளர் ஸ்பெஷல் பிரான்ச் பாலசந்தர். எஸ்.பி.யை கூட ஒரு அதிகாரியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலசந்தர் என்னை மட்டும் இல்லை பல அதிகாரிகளைத் துன்புறுத்துகிறார். வேலை செய்யவிடாமல் செய்கிறார். இந்த மாதிரி பிரச்சனை செய்கிறார்” எனப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது செய்தியாளர்கள், “மாவட்ட காவல்துறை சார்பாக அழுத்தம் கொடுக்கப்படுகிறதாகச் சொல்கிறார். அதாவது மிரட்டும் தொனியில் சொல்லிப் பணி செய்ய விடாமல் ஒரு அழுத்தம் கொடுக்கப்படுகிறதாகக்  குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குக்  காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், “தவறான தகவல். இதனைத் தனிப்பட்ட முறையில் பார்த்து விட்டு இந்த சோதனை சாவடிகள் எல்லாமே அரேஞ்ச் பண்ணிட்டு அந்த பணியில் இன்னும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “விரலைக் காண்பித்து வளைந்து போங்கள், நெளிந்து போங்கள் இல்லையென்றால் ஒடிக்கப்படுவீர்கள்  என்று நீங்கள் சொன்னதாகச் சொல்கிறார்” எனக் கேட்டனர். அதற்கு எஸ்.பி. ஸ்டாலின், “தவறான தகவல்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகத் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் மயிலாடுதுறையில் முகாமிட்டு இன்று (18.07.2025) காலை முதல் அனைத்து தரப்பு காவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி. சுந்தரேசனைத் தற்காலிக பணிநீக்கம் செய்வதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.