/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_221.jpg)
ஆவடி, புதிய ராணுவ சாலையில் அமைந்துள்ளது பழைய மின் வாரிய அலுவலகம். இதன் அருகே, ஆவடி போக்குவரத்து தலைமைக் காவலரான 49 வயதான ஆனந்தன் மற்றும் எஸ். ஐ., இருவர், எப்போதும் போல இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகப் போதை ஆசாமி ஒருவர் நடந்து வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார், பின்னணி குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால், தலைக்கேறிய மதுபோதையில் இருந்த அந்த போதை ஆசாமி, 'உங்களுக்கு இதே வேலையாக இருக்குது. எப்போது பார்த்தாலும் சோதனையா?' என கூறி போலீசாரிடமே தாகாத வார்த்தைகளைப் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், சாலையின் நடுவே ஓடி, வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுத்தியுள்ளார். இதனால், போக்குவரத்து போலீசார் அவரை தடுத்து சமாதானப்படுத்திய நிலையில், திடீரென போதையில் இருந்த ஆசாமி கூச்சலிட்டு தலைமைக் காவலர் ஆனந்தனிடம் கைகலப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தடுக்க முயன்ற எஸ்.ஐ.,க்கள் மீதும் பாய நிலைமை மோசமானது. ஒரு கட்டத்தில் நிலை தடுமாறிய போதை ஆசாமி தலைமைக் காவலரான அனந்தன் கன்னத்தில் திடீரென அடித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போலீசார், சாலையின் ஓரம் வைத்து போதை ஆசாமியை அடித்து ஆவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், போதை ஆசாமி தாக்கியதில் காயமடைந்த தலைமைக் காவலர் ஆனந்தன், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதனிடையே, போக்குவரத்து தலைமைக் காவலர் ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போதை ஆசாமியிடம் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். அதில், போதையில் ரகளையில் ஈடுபட்டது, ஆவடி, நந்தவன மேட்டூரைச் சேர்ந்த 38 வயதான வெல்டர் வெங்கடேசன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, வெல்டர் வெங்கடேசன் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுவெளியில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீசார்.. அவரை கைது செய்தனர். இதனிடையே, மதுபோதையில் போக்குவரத்து தலைமைக் காவலரிடம் வெல்டர் வெங்கடேசன் தகராறில் ஈடுபட்டு தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பணியில் இருந்த காவலர் ஒருவர் போதை ஆசாமியால் தாக்கப்பட்ட சம்பவம் ஆவடி போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)