/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1003_42.jpg)
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் இருந்து ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கும் தொழிலாளர்களும், கல்லூரி மாணவர்களும், தினந்தோறும் பேருந்தில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், 94 BCD எண் அரசுப் பேருந்தில் விஜயகுமார் என்பவர் ஓட்டுநராகவும், காலிங்கராஜ் என்பவர் நடத்துநராகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பேருந்து கடந்த 18 ஆம் தேதி மதியம் 3 மணியளவில், டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து, கலிங்கநாயக்கன்பாளையத்தில் உள்ள மதுபானக் கடை வளைவில் திரும்பியபோது அங்கு போக்குவரத்து நெரிசலாக இருந்துள்ளது. அப்போது, அந்த சாலையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்கள், போதையில் அங்கும் இங்குமாய் தள்ளாடிக் கொண்டிருந்தனர்.
மேலும், அந்த சமயம் பேருந்து செல்வதற்கு வழியில்லாததால், ஓட்டுநர் விஜயகுமார் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த போதை இளைஞர்கள், "யோவ் எதுக்குயா இப்ப ஹாரன் அடிச்சிட்டு இருக்க? ஆளுங்க நிக்குறது கண்ணுக்கு தெரியலையா?” என ஓட்டுநரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். இதையடுத்து, பேருந்தை விட்டு இறங்கிய ஓட்டுநர் விஜயகுமார், அந்த இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஓட்டுநர் விஜயகுமாரை சரமாரியாகத்தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அதில் ஒரு இளைஞர் தான் கையில் போட்டிருந்த இரும்பு காப்பை வைத்து, அவரது மண்டையிலேயே தாக்கியுள்ளார்.
மேலும், இதில் படுகாயமடைந்த விஜயகுமார் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்து எஸ்கேப்பான இளைஞர்களில், ஒருவரை மட்டும் விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அவரை பேருந்தில் ஏற்றிக்கொண்டு, தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, தலையில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் விஜயகுமார், தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் பிடிபட்ட போதை ஆசாமியின் பெயர் சரண் என்பதும், அவர் அதே கலிங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தப்பியோடிய மற்ற இளைஞர்களைப் பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், போதையில் இருந்த இளைஞர்கள் சிலர், பட்டப்பகல்நேரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைசரமாரியாகத்தாக்கிய சம்பவம், பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)