Advertisment

பஸ்ஸ எடுக்கமாட்டாங்களா...? - ட்ரைவரின் காதைக் கடித்து துப்பிய போதை ஆசாமி

 drunk driver bit the ear and spat on it

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்வதற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதியன்று சிவகங்கையில் இருந்து மதுரை செல்ல இருந்த அரசுப் பேருந்து ஒன்று, பேருந்து நிலையத்தில் தயாராக இருந்தது. அந்தச் சமயம், அந்தப் பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சாப்பிட சென்றுள்ளனர்.

Advertisment

இதனிடையே, மதுரை செல்லத்தயாராக இருந்த பேருந்தில் பயணிகளும் கணிசமாக ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த இடத்தில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அங்கும் இங்குமாய்ச் சுற்றித்திரிந்துள்ளார். இதனிடையே, அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் தள்ளாடிக்கொண்டே ஏறியுள்ளார். மேலும், அவர் சீட்டில் உட்கார்ந்த பிறகு அங்கிருந்த பயணிகளிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அந்த போதை ஆசாமியால் பயணிகளுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில், அந்தப் பேருந்துடிரைவர் இல்லாமல் சிறிது நேரம் அங்கேயே நின்றுள்ளது. அப்போது, அந்த ஆசாமி, "பஸ்ஸஎப்போ எடுப்பாங்க. டிரைவர் எங்க போனாரு" என புலம்பிக்கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தலைக்கேறிய போதையில் இருந்த ஆசாமி, தள்ளாடிக்கொண்டே டிரைவர் சீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், பயணிகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் டிரைவர் இல்லாத அந்தப்பேருந்தை தானே இயக்க முற்பட்டுள்ளார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், திடீரென கூச்சலிடத்தொடங்கினர். பின்னர், இந்தத்தகவலைத்தெரிந்து கொண்ட டிரைவர், உடனடியாக பேருந்திற்குள் ஓடிவந்து அந்த போதை ஆசாமியைக் கீழே இறக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் கீழே இறங்கியதும் டிரைவருக்கும் போதை ஆசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நபர், அந்த டிரைவரை கடுமையாகத்தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னை பஸ்சை விட்டு இறக்கிவிட்ட கோபத்தில் அவரது காதைக் கடித்து கீழே துப்பியுள்ளார். இதற்கிடையில், ஆசாமியின் செயலால் பதறிப்போனவர்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத்தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, காயமடைந்த பஸ் டிரைவர் இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த ஆசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கீழக்கொம்புக்காரனேந்தல் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.அதே சமயம், சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்த போதை ஆசாமி ஒருவர், பஸ் டிரைவரின் காதைக் கடித்து துப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

arrested police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe