
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் விடுதிக்குள் புகுந்த கஞ்சா இளைஞர் கும்பல் அங்குள்ளவர்களை தாக்கி அட்டூழியம் செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 'ஸ்ரீ ஆதிசங்கரா' என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். நேற்று இரவு கல்லூரியின் விடுதிக்குள் புகுந்த கஞ்சா இளைஞர் கும்பல் மாணவர்கள் தங்கியிருந்த 2 அறைகளுக்கு சென்று அடித்து உதைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். மற்ற அறையில் இருந்த மாணவர்கள் உள்பக்கம் கதவை மூடிக்கொண்டனர்.
சிக்கிய மாணவர்களை தனித்தனியாக அழைத்து அவர்களை மண்டியிட வைத்து தாக்கியதோடு அவர்களிடமிருந்து தங்கம், வெள்ளி செயின்கள் மற்றும் அவர்களிடமிருந்து பணம் ஆகியவற்றை அக்கும்பல் பறித்துள்ளது. மேலும் மாணவர் விடுதியின் கட்டமைப்புகளையும் அவர்கள் அடித்துச் சேதப்படுத்தி உள்ளனர். மாணவர்களிடமிருந்து மொத்தமாக 13 செல்போன்களை அந்த கும்பல் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஒன்பது போதை இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.