
தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து அதன் முடிவு வர தாமதமாவதால் மக்களும் அச்சத்துடனே இருந்துவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும்முன்பே மருந்து தொகுப்பு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போரின் உடல்நிலையை கருதி மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.