tt

அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் பணிமனையிலிருந்து ஒரு பேருந்து புதுச்சேரி - திருப்பதி இடையே தினசரி இயக்கப்பட்டுவருகிறது. நேற்று முன் தினம் திருப்பதியில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தரனேந்திரன், பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அந்த பேருந்தில் நடத்துநராக ஹோலி பேஸ் என்பவர் இருந்துள்ளார்.

Advertisment

இந்த பேருந்து புறப்பட்டதிலிருந்து மிகவும் மோசமாக இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் மது போதையில் பேருந்தை இயக்குவதை மக்கள் அறிந்தனர். அதன்பிறகு அவர்கள் நடத்துநரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பின் ஓட்டுநரை எழுப்பிவிட்டு, நடத்துநரே பேருந்தை வந்தவாசி வரை இயக்கிவந்துள்ளார்.

Advertisment

அதற்குமேல், நடத்துநர் பேருந்தை ஓட்டக்கூடாது எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயணிகள் சத்தம் போட்டதோடு அங்கிருந்தபடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வந்தவாசி போலீசார் விரைந்து வந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

அங்குவந்த அதிகாரிகள், உடனடியாக மாற்று ஓட்டுநரை வர வழைத்து வந்தவாசியிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தை இயக்கியுள்ளனர். இது சம்பந்தமாக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி குடிபோதையில் பேருந்தை இயக்கிய தரநேந்திரன், அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி நடத்துநர் ஹோலி பேஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.