ADVERTISEMENT

மாணவர்களின் பாதுகாப்புக்காகப் பேருந்தை இயக்க மறுத்த ஓட்டுநர்! 

11:06 AM Mar 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

மாதிரி படம்

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி நகராட்சி, பெண்ணாடம் பேரூராட்சி உட்பட பல கிராமங்களும் அடங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான பேர் தினசரி பேருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் காலை மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது.

நேற்று அரசு பேருந்து ஒன்று திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதில் பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளனர். இதனால் ஓட்டுநர், பெண்ணாடம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு மாணவர்களை பேருந்தின் உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார்.

அவர்கள், பேருந்தின் உள்ளே இடம் இல்லாமல் மக்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் போது, நாங்கள் எப்படி உள்ளே போக முடியும் என்று ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இப்படி பயணிக்கும்போது மாணவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், ஓட்டுநர், நடத்துநர் ஆகிய எங்களை இடை நீக்கம் செய்து, பின் வழக்கு என சிக்கல் வரும். உங்களுக்கும் இது பாதுகாப்பு இல்லை. அதனால், பேருந்தின் உள்ளே சென்றால் பேருந்தை எடுப்பேன் என்று சொல்லியுள்ளார்.

இதனால் பயணிகளுடன் பேருந்து அந்த இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த வேறு ஒரு பேருந்தை நிறுத்தி அதில் மாணவர்கள் பலர் ஏறி சென்றனர். அதன்பிறகே நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை விருத்தாசலம் நோக்கி ஓட்டிச் சென்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT