
திருவாரூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீட்டில் அவரது கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் ராமசந்திரன் (52). இவரது மனைவி ஜெயக்குமாரி (41). இவர் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறார். சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுநராக மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (27) இருந்துள்ளார்.
இந்நிலையில், கார் ஓட்டுநர் சுந்தர், சுகாதார ஆய்வாளர் ராமசந்திரனின் வீட்டுப் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சுந்தரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கார் ஓட்டுநர் சுந்தரின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது தாய் சரஸ்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சுகாதார ஆய்வாளரைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர்.
விசாரனையில், கார் ஓட்டுநர் சுந்தர் தன்னிடம் செல்ஃபோன் கேட்டதாகவும், வாங்கித்தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுநராக இருந்த திருத்துறைப்பூண்டி இளைஞர் ஒருவர் இதுபோல ஒரு விபத்தில் உயிரிழந்ததும், அந்த விபத்து தொடர்பாக ஏற்பட்ட சந்தேகமும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் ராமச்சந்திரனின் தற்போதைய வாக்குமூலமும், ஏற்கனவே நடந்த விபத்தில் பழைய கார் ஓட்டுநர் உயிரிழப்பு சமயத்தில் கொடுத்துள்ள வாக்குமூலமும் போலீசாருக்குப் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதால் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.