/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_218.jpg)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது போக்குவரத்துத்துறை மோட்டார் ஆய்வாளர் அலுவலகம். இந்த அலுவலகத்தின் பின்புறத்தில் சவுடு குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மூலம் சவுடு மண் அள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த லாரிகளில் சுமார் 60 டன் எடையுள்ள சவுடு மண் அள்ளப்பட்டு வருவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆனால், இந்த சவுடு மண் விவகாரத்தில் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சுமார் 20 ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக லாரிகள் மூலம் சவுடு மண் அள்ளப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால், அந்த குவாரியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சுழலில், கும்மிடிப்பூண்டியை அடுத்த ராக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்மதன். 30 வயதான இவர், இந்த சவுடு மண் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், இந்த டிரைவர் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தில் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்று டிரைவர் மதன் குவாரியில் லோடுகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, நீண்ட நேரம் வேலை செய்துகொண்டிருந்த மதனுக்கு திடீரென களைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கடைக்குச் சென்று மதிய உணவு வாங்கி வந்த மதன், அந்த உணவை குவாரியில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம், ஏராளமான லாரிகள் அங்கும் இங்குமாய் சென்றுகொண்டிருந்தது. இதனிடையே, குவாரிக்குள் வேகமாக வந்துகொண்டிருந்த கனரக லாரி ஒன்று திடீரென தடம் புரண்டுள்ளது. அந்த நேரத்தில், டிரைவர் மதனும் குவாரியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த மதனை நோக்கி வேகமாக வந்துள்ளது. ஒரு கணம்பதற்றமடைந்த மதன், அங்கிருந்து தப்பிப்பதற்குள் அந்த வாகனம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மதன் மீது ஏறி இறங்கியது. மேலும், இதில் பலத்த காயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் மதனின் சடலத்தைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த மதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குவாரியில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த குவாரியில் அரசு விதிகளை மீறி, அதிகளவில் மண் அள்ளப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் இந்த குவாரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பரபரப்பாகக் காணப்பட்ட குவாரியில் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)