
அதிமுக மாநில இளைஞர் அணி எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளராக பதவி வகிப்பவர் ஈஞ்சூர் ராமு. இவர் திருச்சி சமயபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் குடிநீர் குறைவாக வந்துள்ளது. அதன் காரணமாக சமயபுரம் கண்ணனுார் பேரூராட்சி பணியாளரும், மாற்றுத்திறனாளியுமான வீரராகவன்(40) என்பவரிடம் இது குறித்து ராமு கேட்டுள்ளார்.

அப்போது ராமு மற்றும் வீரராகவனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ராமு, ஆத்திரத்தில் பேரூராட்சி ஊழியர் வீரராகவனை வீட்டில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து சமயபுரம் போலீசாரிடம் வீரராகவன் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ராமு அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.