
10 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (04.02.2021) ரயில்வே ஊழியர்கள் சங்கமான டிஆர்இயு தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல் கோரிக்கையாக பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறைகளையும் தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தலை நடத்தி சரியான வாக்கெடுப்புகளை ரயில்வே துறையில் எடுக்க வேண்டும்.
ரயில்வே ஊழியர்களுக்கு 3 தவணையாக வழங்கப்பட வேண்டிய 11 சதவீத டிஏவை, ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் உடனே வழங்க வேண்டும். பெண் டிக்கெட் பரிசோதகர்களை ஜெனரல் கம்பார்ட்மெண்ட் கோச்சுகளில் ஈடுபடுத்தக்கூடாது.
டிக்கெட் பரிசோதகர் தகுதியில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.