'The dream of 140 crore Indians has been reflected'- Tamil Nadu CM congratulates Pragnananda

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது.

Advertisment

இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை - பிரேக்கர் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3 ஆவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களை இறுதிப்போட்டி நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகள் டிராவில் முடிந்த நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் இன்று களம் இறங்கிய பிரக்ஞானந்தா முதல் சுற்றில் வீழ்ந்த நிலையில், இரண்டாம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இருப்பினும் செஸ் உலகக்கோப்பையின் இறுதிவரை சென்று இரண்டாம் இடம் பிடித்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில் 'பிரக்ஞானந்தாவின் சாதனையை கண்டு ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்கிறது. உங்கள் வெள்ளிப் பதக்கம் மற்றும் கேண்டிடேட் செஸ் தொடருக்கு தகுதிபெற்றது வருங்கால தலைமுறையை ஊக்குவிக்கும். தோல்வி அடைந்த போதிலும் பிரக்ஞானந்தாவின் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.