Dravidian Movement Research Sabarisan donation to Cambridge University

தமிழ்நாட்டின் சமூக நீதி மரபுடன் உலகத் தரமான கல்வியாளர்களை இணைக்கும் மைல்கல் நிகழ்வாக, பிரபல தொழில்நுட்பத் துறை தொழில் முனைவோரும், தமிழக முதலமைச்சர் மருமகனுமான சபரிசன் மற்றும் அவரது மனைவி செந்தாமரை ஆகிய இருவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் திராவிட இயக்கம் பற்றியும், அவ்வியக்கம் தென்னிந்தியாவில் ஏற்படுத்திய சமூக - பொருளாதார - பண்பாட்டு உருமாற்றம் பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பெருந்தொகையை நன்கொடை அறிவித்துள்ளனர். இந்த ஆய்வுப் பரிசு, திராவிட இயக்கத்திலிருந்து உருவான அரசியல் சிந்தனை, கொள்கை வகுப்பு, பொருளியல் மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஆராயும் முனைவர் பட்ட ஆய்வாளக்கும், முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும்.

தமிழ்நாட்டின் ஐந்து முறை முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் தன்னிரகற்ற தலைவர்களில் ஒருவருமான கலைஞரை போற்றும் வகையில், இந்த ஆய்வு உதவித்தொகைக்கு ‘கருணாநிதி ஆய்வு உதவித்தொகை’ என்று பெயரிடப்படும். இந்த உதவித்தொகைகள் சமூக நீதி, கல்வி வளர்ச்சி, ஒருங்கிணைந்த பொருளாதார முன்னேற்றம், திராவிட மாடல் பற்றிய ஆய்வுகளை ஊக்குவித்து என்றென்றும் கலைஞரின் புகழை நிலைநிறுத்தும். இந்த அறக்கட்டளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனிதவியல் துறை - சமூக அறிவியல் துறைக்குள் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதையைப் பற்றிய உலகளாவிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சபரீசன், செந்தாமரை ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லோருக்கும் எல்லாம், சமத்துவம், சுயமரியாதை ஆகியவை உலகளாவிய அரசியல் களத்தை மாற்றியமைக்கும் வேளையில், அரசியல் கொள்கையால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான ஊக்கமளிக்கும் முன்மாதிரியை தமிழ்நாடு வழங்குகிறது. இந்த ஆய்வுப் பரிசு கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்த திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், அந்த இயக்கம் பற்றிய ஆய்வுகள் உலகத்தரமான புலமை - கொள்கை வகுப்பு உரையாடல்களின் ஒருபகுதியாக மாறுவதை உறுதி செய்வதற்கும் ஆகும். இந்த இயக்கம் பற்றிய ஆராய்ச்சியும் உரையாடலும், இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்களைப் பொறுத்தவரை, இது தனிப்பட்ட முறையில் முன்னெடுக்கும் விஷயம். சமூக முன்னேற்றம் – சமத்துவம் என்கிற இலட்சிய வேட்கை கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையிலும், நமது மக்களின் வாழ்க்கையிலும் ஆழமாக ஊடுருவியுள்ள திராவிட இயக்க மரபுக்கு இது காணிக்கை ஆகும். பகுத்தறிவு சார்ந்த சீரிய ஆராய்ச்சி மூலம் பெரும் மாற்றங்களை விளைவித்த திராவிட இயக்க வரலாற்றை ஆராய இந்த ஆய்வுப் பரிசுகள் அடுத்த தலைமுறை அறிஞர்களை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.