
குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மனைவி கண் விழிக்கவில்லை என நாடகமாடிய கணவரை கைது செய்த சம்பவம் நாகர்கோவிலில் நிகழ்ந்துள்ளது.
நாகர்கோவிலில் பரோட்டா மாஸ்டராக இருந்து வந்தவர் முகமது உசேன். இவரது மனைவி ரெஜின் பானு. இன்று காலை மனைவி ரெஜின் பானு கண்விழிக்கவில்லை, மயங்கி விழுந்து விட்டார் என ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த முகமது உசேன், அவரைக் கொண்டு சென்று கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அப்பொழுது ரெஜின் பானுவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ரெஜின் பானுவின் கழுத்துப்பகுதி நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் முகமது உசேனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்தது. மேலும், காலையில் மனைவி கண் விழிக்கவில்லை, மயங்கி விழுந்து விட்டார் என்று நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.