Skip to main content

தெருக்கூத்தில் கலக்கும் சிறுவன்; ஆச்சரியத்தோடு சிரித்து மகிழும் மக்கள்

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

Drama artist kid

 

இன்றைய இளைஞர்கள் முதல் சிறார்கள் வரை எல்லோரும் கிரிக்கெட், மொபைல் கேம், டிவி ஷோக்கள் பின்னால் ஓடுகிறார்கள். 11 வயதேயான சிறுவன் தெருக்கூத்தில் அரிதாரம்பூசி, மன்னர் கால உடை உடுத்தி இதோ வந்தேன்டா என கையில் கத்தியுடன் மக்கள் முன் வந்து நின்று பம்பரம் போல் சுற்றி சுற்றி ஆடுவதும், பாடுவதையும் காணும் ஒவ்வொருவரும் ஆச்சர்யமாகிப் போகிறார்கள்.

 

தெருக்கூத்து கலைஞர்களுக்கு உடல் பலம், டைமிங் சென்ஸ், டயலாக் டெலிவரி, நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மை ஆகியவை மிகவும் முக்கியம். இதையெல்லாம்விட கலைஞனின் குரல் முக்கியம். தெருக்கூத்தை ரசிக்கும் கிராமத்து முதியவர்கள், எளிமையான மக்களுக்கு கதை நன்றாக தெரியும். சொதப்பினால் ஏச்சுக்கு ஆளாவார்கள். அவற்றை மனதில் நிறுத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் முன் தான் நடிக்கும் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதியவைப்பது என்பது கலைஞர்களுக்கு பெரும் சவாலானது. அந்த சாவல் எல்லாம் எனக்கு சர்க்கரை பொங்கல் என்கிறான் சிறுவன் தமிழ்செல்வன்.

 

திருவண்ணாமலை, அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தெருக்கூத்து நாடக ஆசிரியர்கள் முத்துச்சாமி, கிருஷ்ணன். 40 ஆண்டுகளாக தெருக்கூத்து நடிகராகவும், ஆசிரியர்களாகவும் இருந்துவருகிறார்கள். அதில் முத்துச்சாமி என்கிற மொட்டையனின் மகள் வழிப்பேரன் தமிழ்செல்வன். 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் அப்பா ராஜேஷ் தினக்கூலி வேலை செய்கிறார். அம்மா பார்வதி டைலராக உள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் படிக்கவைக்கவே சிரமப்பட்டுள்ளனர். இதனால் முத்துச்சாமி, பேரன் தமிழ்செல்வன் மற்றும் பேத்தியை அழைத்துவந்து தானே வளர்த்துவருகிறார். தாத்தா நடத்தும் தெருக்கூத்து நாடகங்களை பார்த்து ரசித்த தமிழ்செல்வனுக்கு அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Drama artist kid

 

இரவில் கண்விழித்து பார்க்கும் தெருக்கூத்துகளில் அதில் நடிக்கும் கலைஞர்களின் உடல்மொழி, நடனம், பாடல்பாடும் விததத்தை உள்வாங்கிக்கொண்டு மறுநாள் தங்களது நிலத்தில், பள்ளி வகுப்பறையில் பாடியும், ஆடியும் பயிற்சி பெற்றுள்ளான். அவனின் ஆசையைப் பார்த்த சக நாடக கலைஞர்கள் ஆச்சர்யமாகி சிலமாதங்களுக்கு முன்பு தங்களது கிராமத்தில் நடந்த நாடகத்தில் முதன்முதலாக பரிட்சார்த்த முறையில் சவாலான வாதாபி கதாபாத்திரத்துக்கு அரிதாரம்பூசி நடிக்கவைத்துள்ளார்கள். சிறுவனின் நடனவேகம், டயலாக் டெலிவரியை கண்டு ஆச்சர்யமானவர்கள் அவனின் சில தவறுகளை திருத்தி வெளியூரில் நடக்கும் நாடகங்களுக்கு அழைத்து செல்ல துவங்கினர். தற்போதுவரை 12 இடங்களில் நடந்த தெருக் கூத்துகளில் நடித்துள்ளான்.

 

நள்ளிரவு 12 மணிக்கு மகாபாரதத்தில் கவுரவர்களின் தலைவனான துரியோதனின் 99 தம்பிகளில் கடைசி தம்பியான விகூர்ணன் பாத்திரத்தில் நடிக்க அரிதாரம் பூசிக்கொண்டிருந்தான் தமிழ்செல்வன். நாடக நடிகருக்கு மக்கள் மத்தியில் நடிப்பது எந்தளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அரிதாரம் பூசுவது, உடை உடுத்துவது. நன்றாக நடிக்கும் நடிகருக்கே அரிதாரம் பூசுவது என்பது சவாலானது என்கிறார்கள் சககலைஞர்கள். 

 

11 வயதில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தானே கலர் தயார் செய்து முகத்தில் பூசிக்கொள்ள துவங்கிய தமிழ்செல்வனிடம் நாம் பேசியபோது, “தாத்தா கூட நாடகம் பார்க்கப்போவேன். அவர் சொல்லித்தர்றதயும், சககலைஞர்கள் ஆடுவதையும், பாடுவதையும் பார்த்து நாமும் அப்படி நடிக்கனும்னு கத்துக்கிட்டன். எங்க நாடக குழுவில் இருக்குறவங்க சப்போட் செய்தாங்க. இப்போ 10 நாடகத்துக்கு மேல நடிச்சிட்டேன். இரவில் வேஷம் கட்டுவன், பகல்ல ஸ்கூல் போவன். நடிச்சி முடிச்சதும் மக்கள் எல்லோரும் கைதட்டி பாராட்டி, நல்லா நடிச்சன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. இதில் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு, கத்துக்குவன்” என அளவாகவே பேசினார் சிறுவர் தமிழ்ச்செல்வன்.

 

அரிதாரம்பூசி மக்கள் முன்வந்து நின்ற சிறுவனின் திறமையை கண்டு மக்கள் ஆச்சர்யமானார்கள். சூரன் வேடம் கட்டுபவர்கள், முட்டிப்போட்டு நாடக மைதானத்தை வலம் வரவேண்டும். காற்றை கிழித்துக்கொண்டு சுற்றுவதுப்போல் சுற்றினான். சிறுவனின் நடனமும், நூற்றுக்கணக்கான மேடைகள் கண்ட சகநடிகர்களுக்கு ஈக்வலாக விடிய விடிய நடித்து பாராட்டைபெற்றான். அவனின் நடிப்பை பார்த்து மக்கள் கைதட்டி ரசித்து, ஊக்குவித்தபடியே இருந்தனர்.
 


படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டடி திருக்குறளை ஓவியமாக்கும் சாதனை பெண் ‘செளமியா’

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 ARTIST SOWMIYA | THIRUKURAL | PAINTING |

 

ஓவியம் மீதான ஆர்வம் வருவதற்கான காரணம் என் நினைவில் இல்லை. ஆனால், ஆரம்பம் முதலே எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஓவியம் வரைவேன். நோட்டுப்புத்தகத்தில் கூட ஓவியங்களே அதிகம் தென்படும். ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்கு ஓவியம் எப்படி உதவும் என தோன்றியது. அப்போது தனியார் நிறுவனத்தில் விஷுவல் மீடியா டிப்ளோமா படிப்பில் சேர்ந்தேன். இதற்கு முன் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்திருப்பேன். எந்த ஒன்றில் கவனம் செலுத்துவது. எந்தெந்த வடிவங்களில் ஓவியம் வரையப்படுகிறது என்பது பற்றிய பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதற்குப் பிறகு ஓவியங்களில் இருக்கும் வகைகள் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு பயிற்சி பெற்ற பிறகு வல்லுநராக உருப்பெற்றேன். 

 

எந்தவொரு ஓவியம் வரையும் பொழுதும் சிரமத்தை உணர்ந்ததில்லை. மாறாக அது மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது. இன்றோடு 1318 வது நாளாக நான் தொடர்ந்து வரைந்து வருகிறேன். இதில் இத்தனை சவால்கள் இருந்தாலும் முற்றிலும் இந்தப் பயணம் சந்தோசமாக தான் இருந்துள்ளது. முதுகலைப் பட்டமும் படித்து விட்டு, தற்போது ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்யலாம் என சிந்தித்தேன். நமக்கு தெரிந்த ஓவியத்தை குறித்தே ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். நாலுவரி கவிதைகளை வைத்து ஓவியமாக எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்து சில ஆய்வுகள் இருக்கின்றன. அதேபோல், தமிழிலும் அதிகளவு சிறந்த இலக்கியங்கள் இருப்பதனால் இதனைத் தெரிவு செய்தேன்.

 

தமிழ் இலக்கியம் என முடிவு செய்த பின், முதலில் நினைவிற்கு வந்தது திருக்குறள். தமிழ் மொழியை கடந்து அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறாக இருந்தது, எந்த மாதிரி சூழ்நிலைகளில் வாழ்ந்தோம், இப்பொழுது தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் போன்ற கேள்விகள் எழும். விட்டலாச்சாரியா, வரலாற்றுப் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் அதிகம் உண்டு. ராஜாக்கள் காலத்து கதைகள் மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியதாக இருந்தது. காலங்கள் செல்ல இதுபோன்ற படங்களின் வரவு குறையத் தொடங்கியது. ரசிகர்களின் மனதைக் கவரக் கூடிய படங்கள் அவர்களின் மரபு சார்ந்து எடுக்கப்படுபவையாக பெரும்பாலும் உள்ளது. மேலும் அவை அவர்களிடத்தில் ஆர்வத்தை உருவாக்கும். 

 

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியோர் வரை பரீட்சயமான திருக்குறளில் இருந்து ஓவியத்தை துவங்கலாம் என முடிவெடுத்தேன். ஓவியம் வரைய ஆரம்பித்த முதல் பதினைந்து நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. முதல் நூறு நாட்களில் நேரம் தவறாமையைக் கற்றுக்கொண்டேன். அடுத்து, சிறிய அளவிலான தாளில் வரையத் தொடங்கி பின்பு பெரிய தாளுக்கு மாறினேன். வரையும் பொழுது சில யுக்திகளைக் கையாண்டு, யதார்த்தவாதம், உருவக முறைகளை பயன்படுத்தினேன். மக்களுக்கு பழமொழிகளைப் போல எளிமையில் எடுத்துரைக்க, அவர்களுக்கு நல்லது - கெட்டது எனத் தோன்றும் விசயங்களை வைத்து வரைந்தேன்.. இவ்வளவு நாட்களை கடந்தும் இன்றும் வரைதலின் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.
 

 

 

Next Story

பிரபல ஓவியர் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Famous Painter Passed Away Obituary of Chief Minister M. K. Stalin

 

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல ஓவியர் மாருதி (வயது 82). இவருக்கு இதயக் கோளாறு காரணமாக புனேவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த  நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மாருதி என்ற தலைப்பில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ஓவியர் மாருதிக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர்.

 

ஆரம்பக் காலங்களில் ரங்கநாதன் என்ற பெயரில் திரைப்படங்களுக்குப் பேனர் உள்ளிட்டவற்றை வரையும் வேலை செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க இதழ்களுக்கு ஓவியம் வரையும் பொழுது 'மாருதி' எனக் கையொப்பம் இட்டார். அது அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டது என ஒரு நேர்காணலில் கூறி இருந்தார். ஓவியர் மாருதி ஓவியம் மட்டுமல்லாது உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கும், வீர மங்கை வேலு நாச்சியார் என்ற ஓரங்க நாடகத்திற்கும் ஆடை வடிவமைப்பிலும் ஈடுபட்டார். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதும் வழங்கியுள்ளது.

 

இந்நிலையில் ஒவியர் மாருதி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.