குடியிருப்பு பகுதியில் வழிந்தோடும் பாதாளசாக்கடை... நோய்பரவும் அச்சத்தில் பொதுமக்கள்...

சாலைகளில் வழிந்தோடும்பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் என்கிற அச்சத்தில் உறைந்துள்ளனர் மயிலாடுதுறை பொதுமக்கள்.

drainage water overflows on road at mayiladuthurai

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு பகுதியான ஆரோக்கியநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலம்காலமாக வசித்துவருகின்றனர்.

அந்தப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை இணைப்பு குழாயிலிருந்து கழிவுநீர் வெளியேறி வருகின்றது. முதலில் சிறிய அளவில் வெளியேறிய கழிவுநீர் கடந்த இருபது தினங்களாக அதிகமான அளவு வெளியேறிவருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசி, அப்பகுதியில் உள்ள சாலைகளில் கழிவுநீர் ஓடுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மூன்று பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். சாலைகளில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் ஊறுவாகியுள்ளது.இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொற்றுநோய் ஏற்பட்டுவிடுமோ, டெங்குகாய்ச்சல் வருமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

"டெங்கு காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் ஆரோக்கியநாதபுரத்தில் சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரை உடனடியாக சரி செய்ய வேண்டும்," என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

Mayiladuthurai Nagapattinam
இதையும் படியுங்கள்
Subscribe