Skip to main content

‘பழி’ வாங்கிய அமைச்சர்!!! மருத்துவப் போராளி மரணம்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

ஏழை எளிய மக்களின் மருத்துவசிகிச்சைக்காகவும் அரசு மருத்துவர்களின் நலனுக்காகவும் போராடிய டாக்டர் லட்சுமி நரசிம்மனின் மரணம் பேரதிர்ச்சியை மட்டுமல்ல, பெருஞ்சர்ச்சையையும் உண்டாக்கியிருக்கிறது. ‘இவரது, மரணத்துக்குக்காரணமே சமீபத்தில் மருத்துவர்களை ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்தால் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் பழிவாங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம்தான்’ என்று குற்றச்சாட்டு எழுந்ததால் விசாரிக்க ஆரம்பித்தோம்.

 

dr lakshmi narasimhan




தென் தமிழகத்தில்  ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி தயாரித்துக்கொண்டிருந்த Pasteur Institute of India எனப்படும் மத்திய அரசின் இந்திய பாஸ்டியர் நிறுவனத்தை மூட முயன்றபோது டாக்டர் ரெக்ஸ் சர்குணத்துடன் இணைந்து மூடக்கூடாது  என்று மிகக்கடுமையாக போராடியவர். 1987 ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இரண்டு வருடத்திலேயே மருத்துவ மாணவர் சங்கத்தின் செயலளாராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். 


ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையை  ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் திமுக  அரசுடைமையாக்கியது. ஆனால், பணக்காரர்கள் பயன்படும் வகையில் அதிமுக அரசு, தனியாரிடமே திருப்பி ஒப்படைத்தப்போது அதை எதிர்த்து தமிழகமே அதிரும் அளவுக்கு  57 நாட்கள்  மிகக்கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து 17 நாட்களுக்குமேல் சிறையில் அடைக்கப்பட்டவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன்.  
 


கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, அரசு மருத்துவர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ஃபோக்டா எனப்படும் (Federation of Government Doctors’ Associations -FOGDA)  அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கியவர்…   நோயாளிகளுக்கு  ஏற்ப   மருத்துவர்கள்   நியமனம் செய்வது,  அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப்படிப்பில் சேர  50 சதவீத இட ஒதுக்கீடு, கலந்தாய்வு  நடத்தி  பணிநியமனம் மற்றும் பணிமாறுதல் வழங்குதல்,  சம்பள  உயர்வு  என  4  அம்ச நியாயமான  கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ப்போராட்டத்தை வழிநடத்திவந்தார் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். 


 

 

கடந்த 2013 ஆம் ஆண்டு சேலம் மருத்துவக்கல்லூரியில் அறுவைசிகிச்சை செய்துகொண்டிருந்தபோது ஒரு சிறு நெஞ்சுவலி, ஏற்பட்டு வினாயகாமிஷனில்  மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு ஸ்டெண்ட் வைக்கப்பட்டது. அதற்குப்பிறகு, மிகவும் ஆரோக்கியமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார். கடுமையான உழைப்பாளி என்பதைவிட இடதுசாரி சிந்தனைகொண்ட போராளி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, ‘போராட்டத்தை வாபஸ் வாங்கினால் கோரிக்கைகள் கணிவாக ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று உறுதியளிக்கிறார். 
 


அதனை ஏற்றுக்கொண்டு 31 ந் தேதி காலையில் போராட்டத்தை வாப்ஸ் வாங்குகிறார்கள். அதிலிருந்தே, தொடர்ந்து பழிவாங்க ஆரம்பித்தது அரசு.  150 டாக்டர்களுக்கு 17 பி ஜார்ஜ் கொடுக்கப்பட்டதில், 118 பேருக்கு பனிஷ்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர் கொடுக்கப்பட்டு பந்தாடப்பட்டார்கள். டாக்டர் லட்சுமி நரசிம்மனும் பந்தாடப்பட்டார்.  



இதில், 13  பெண் மருத்துவர்கள். பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதில் ஆரம்பித்து அவர்களது குடும்பமே பாதிக்கப்பட்டது. ஒரு பெண் மருத்துவருக்கு கால் விபத்து ஏற்பட்டுவிட்டது. ஒரு மருத்துவரின் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கிறது. ஒரு மருத்துவரின் அப்பாவுக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது. இன்னொரு, பெண் மருத்துவரின் கணவருக்கு மன உளைச்சால் மாரடைப்பே ஏற்பட்டது. இதனால், 4 முறைக்குமேல் டாக்டர் லட்சுமிநரசிம்மன் புதுக்கோட்டைக்குப் போய் விஜயபாஸ்கரை சந்தித்து போராடிய டாக்டர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடரவேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். 
 

 

நம்பளாலதானே டாக்டர்களுக்கு இந்த பாதிப்பு என்று குற்ற உணர்வும்  மன உளைச்சலில் இருந்தார். வாராவாரம், சென்னை வருவது சுகாதாரத்துறை அமைச்சரை சந்திப்பது என 3 மாதங்கள் அலைந்துகொண்டிருந்தார். கடந்த, 2020  பிப்ரவரி-6 ந்தேதி நெஞ்சுவலி என்று சேலம் மணிப்பால் மருத்துவமனையில் அட்மிட் ஆனவர் காலையில் இறந்துவிட்டார். 
 

50 வயதுதான். இரண்டாவது, மூன்றாவது மகன்கள் பன்னிரெண்டாம் வகுப்புதான் படிக்கிறார்கள். சாகக்கூடிய அளவுக்கு மருத்துவப்பிரச்சனைகளே இல்லை. அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே அவரது உயிரை பறித்துவிட்டது என்கிறார்கள் மருத்துவத்துறையினர் வேதனையோடு. இன்னும் எத்தனை டாக்டர்களின் உயிரை காவு வாங்க இருக்கிறதோ சுகாதாரத்துறை?  
 


 

சார்ந்த செய்திகள்