
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 30 ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வருவதை தொடர்ந்து மாநில மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 29 ந் தேதி மதியம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி யும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , "தமிழக முதல்வர் நாளை 30 ந் தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் புதியதாக உருவாக்கப்பட்டு வரும் படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். 95 லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 82 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுவிட்டது. இன்னும் 6 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது. அதுவும் 3 நாட்களுக்கு மட்டுமே வரும். கரோனா தடுப்பூசி கையிருப்புக்கு ஏற்ற வகையில் போடப்பட்டு வருகிறது. மேலும் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிக்கு தமிழக அரசு ரூபாய் 85 கோடி செலுத்தி 13 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது. அது வந்தவுடன் அனைத்து இடங்களுக்கும் பிரித்து தரப்படும்". என்ற அவர்,

"தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான் 3.5 கோடி தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அந்த பணி ஜூன் 4 ம் தேதி முடிவுற்று ஜூன் 5 ம் தேதி திறக்கப்படும். அதன் பின்னர் 6 மாத காலத்திற்குள் தடுப்பூசி கொள்முதல் நிறைவு பெறும். தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி பெற டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்பாலு முகாமிட்டுள்ளார். பத்து ஆண்டுகளாக செயல்படாத செங்கல்பட்டு ஹெச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை திறக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்து இருக்கிறோம். அந்த அனுமதி கிடைத்தால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை நாமே தயாரித்து கொள்ள முடியும். மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வாகனங்களில் வரும் நோயாளிகளை காத்திருக்க வைக்க கூடாது என்பதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் 'ஜீரோ டிலே' வார்டு அமைக்கப்பட உள்ளது" என்றார்.
இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.