தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரின் மகள் தங்கப்பிரியா. இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவரது மகனும், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலாக பணியாற்றி வரும் பூபாலனுக்குக் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போதே 60 பவுன் நகை, புல்லட் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவற்றை சங்கப்பிரியா குடும்பத்தினர் கொடுத்திருந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் தனியார்ப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தங்கப்பிரியாவின் கணவர், மாமனார், மாமியார், பூபாலனின் சகோதரி ஆகியோர் தினமும் சங்கப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வரதட்சணை பிரச்சனையால் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அண்மையில் தங்கப்பிரியாவின் தந்தை சிவா அவரது மகனுக்கு ஒரு கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி தந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கபிரியாவின் கணவரான காவலர் பூபாலன் உன் சகோதரர்களுக்கு மட்டும் உன் வீட்டில் உதவி செய்கிறார்கள். உன் பங்கை நீ கேட்டுப் பெற்றுத் தர வேண்டும் என்று அவரும், அவரது குடும்பத்தினரும் தொடர்ச்சியாகத் தங்க பிரியாக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகப் பூபாலன், தனது மனைவி தங்கப்பிரியாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய ஆடியோ இன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தங்கபிரியா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் காவலர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு தங்கபிரியாவின் குடும்பத்தினர் இது குறித்து மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சங்கபிரியாவின் பூபாலன், மாமனார் செந்தில்குமார், மாமியார் விஜயா நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீதும் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர். இதன் காரணமாகத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் காவலர் பூபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை மதுரை சரக டி.ஐ.ஜி .அபினவ் குமார் பிறப்பித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை சட்ட ரீதியாக எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.