Skip to main content

வித்தியாசமான வரதட்சனை கேட்ட ஐஏஎஸ் அதிகாரி... ஆச்சரியமடைந்த பெண் வீட்டார்..!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

அந்த திருமணத்தில் பங்கேற்ற சக அதிகாரிகளும், உற்றார் உறவுகளும் ஆட்சியரை மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐஏஎஸ் தேர்வு ஆனபோது கூட பெற்றோரும், உற்றோரும் இந்த மகிழ்ச்சி அடையவில்லை. எத்தனையோ வரன்கள் வந்தும், சேவை செய்யும் மருத்துவர் தான் வேண்டும் என அடம்பிடித்து, திருமணம் முடித்ததை கண்டு அக மகிழ்ந்து போனார்கள்.

 

Wedding




ஆம்...நெல்லையில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றும் சிவகுரு பிரபாகரன். இப்போது, டாக்டர்.கிருஷ்ணபாரதியை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த 26-ந்தேதி பேராவூரணியில் நடைபெற்றது.

 

திருமணத்திற்கு முன்னதாக மணப்பெண் வீட்டாரிடம் வரதட்சனை என்ற அடிப்படையில் விதித்த நிபந்தனை. திருமணத்திற்கு பிறகு வாரத்தில் 2 முறை, "நான் பிறந்த ஒட்டங்காடு (தஞ்சை மாவட்டம்) கிராமத்தை சுற்றியிருக்கும் கிராமத்தில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும்" என்ற நிபந்தனை தான். அவரது இந்த வித்தியாசமான சமூக சிந்தனைக்கு பெண் வீட்டாரும் மகிழ்வோடு ஏற்று உள்ளனர். 


 

அடிப்படையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அவர், பொறியியல் படிப்பை முடித்தபிறகு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2018-ல் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்தார்.
 

விதை நெல்லை விற்று படித்தவர்::
 

தற்போது நெல்லை மாவட்ட உதவி ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றும் சிவகுரு பிரபாகரன். அடிப்படையில் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தாய்-தந்தையார் ஆடு, மாடு மேய்த்து அதில் கிடைத்த வருமானத்தில் படிக்க வைத்தனர். விதை நெல்லை விற்று அதில் கிடைத்த ரூ.32 ஆயிரத்தை முதல் வருட கட்டணமாக செலுத்திய பிரபாகரனுக்கு, பொறியியல் படிப்பு அவசியம் தானா? என்ற கேள்வியும் எழுந்தது.
 

இருந்தாலும் நண்பர்கள் உதவியுடன் பொறியியல் முடித்த பிறகு, ஐஐடியில் எம்.டெக் முடித்த சிவகுரு பிரபாகரனுக்கு, ஐஏஎஸ் ஆவது மட்டுமே இலக்காக இருந்தது. இதனால், பிற துறைகளில் கிடைத்த வேலை வாய்ப்புகளை இழந்தார்.


 

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான போதும் செல்போன் ரீ-சார்ஜ் கடையில் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்த அவர், விடா முயற்சியுடன் படித்தார். 2018-ல் ஐஏஎஸ் ஆனார். அதாவது 4-வது முயற்சியில் வெற்றி அவர் வசமானது.
 

அகல உழுதலும், பின் ஆழ உழுவதும் உத்தமம் என்ற தெளிவு அவசியம் என்பதை உணர்ந்திருந்தார் சிவகுரு பிரபாகரன். இப்போதும் அதை தக்க வைத்திருக்கிறார். வாழ்த்துகள் சார்..!
 

 

 

சார்ந்த செய்திகள்