nn

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மருமகள் அளித்த புகாரின் பேரில், செப். 4ம் தேதி காவல்நிலைய விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக எம்எல்ஏ சதாசிவம், மனைவி உள்ளிட்ட நான்கு பேருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம். இவருடைய மகன் சங்கர். இவருக்கும், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா (24) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீப காலமாக கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மனோலியா சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் தன்னை கொடுமைப் படுத்தியதாகவும், கணவர் தன்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வருவதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

அந்தப் புகாரின் பேரில், சதாசிவம் எம்எல்ஏ உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, ஆபாசப் படம் எடுத்தல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சதாசிவம் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பினர். செப். 1ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவர்களில் ஒருவர் கூட காவல் நிலையத்திற்கு வரவில்லை. இது ஒருபுறம் இருக்க சதாசிவம் உள்ளிட்ட நால்வரும் முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரம்பநிலை விசாரணைக்குக் கூட யாரும் ஆஜராகாததால் அவர்களுக்கு முன்பிணை வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்திய நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் செப். 4ம் தேதி விசாரணைக்காக சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர்களின் முன்பிணை மனுவை செப். 7ம் தேதிக்குள் தள்ளி வைத்தார்.