Skip to main content

நடத்தையில் சந்தேகம்; ஆத்திரத்தில் மனைவி எடுத்த முடிவு

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Doubt in behavior; A decision taken by the wife in anger at madurai

மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (24) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. 

இந்த நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். ராஜ்குமார் அடிக்கடி வேலைக்கு செல்லாததால் அவரின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மஞ்சுளா வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். வேலைக்கு சென்று வந்த நிலையில், மஞ்சுளாவின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்து ராஜ்குமார் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். கணவனின் நடவடிக்கையால் மஞ்சுளா மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று கூறப்படுகிறது. இதனால், ராஜ்குமாரை கொலை செய்துவிட மஞ்சுளா முடிவு செய்துள்ளார். 

அந்த வகையில், நேற்று முன் தினம் (17-12-23) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். அவர் இறந்ததை உறுதி செய்த மஞ்சுளா, தனது கணவர் தனக்கு தானே கழுத்தை கயிற்றால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, போலீசாரின் விசாரணைக்கு பயந்த மஞ்சுளா, கச்சைக்கட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அப்போது அவர், தனது கணவரின் கழுத்தை கயிற்றால் கொலை செய்தது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர், வாடிப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், மஞ்சுளா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்த மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்