Skip to main content

"அனைத்து முதியோருக்கும் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும்" - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

doorstep delivery for old age pension i periyasamy 

 

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மணிகண்டன், சபா ராஜேந்திரன், ஐயப்பன் மற்றும் இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெரியசாமி, "தமிழக முதல்வர் கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற திட்டத்தின் அடிப்படையில் வருவாயில் ஊராட்சிகளுக்கு தேவையான நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளார். குறைவான மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக இருந்தாலும் அந்த ஊராட்சியின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிதி ஒதுக்கீட்டில் 51 சதவீதம் ஊராட்சிகளுக்கும் 49 சதவீதம் நகராட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்துள்ளார். ஊரக உள்ளாட்சித் துறை  சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வழியாக விவசாயத்திற்கு பயன்படுகின்ற கால்வாய்கள் உட்பட அனைத்து சிறிய கால்வாய்களும் வேளாண்துறையின் சார்பில் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 80 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. அவற்றில் 70 ஆயிரம் கிராமங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வருகின்றன. தற்போது வரும் 15 நாட்களுக்குள் அதை 40 ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் உயர்த்தி பணிகள் நடைபெற ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஊராட்சிகளின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஜல்ஜீவன், மெசர் திட்டத்திற்கு அப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும் குடிநீர் தேவைக்காக கட்டப்பட உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உயரத்தை 12 மீட்டர் அளவில் உயர்த்திக் கட்ட வேண்டும்.  பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்குப் பதிலாக புதிதாக மேல்நிலை நீர் சேர்க்கை தொட்டிகள் கட்டித் தர தேவையான நிதியை வழங்கி அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திருவிழா ஏற்படுத்திட வேண்டும். அதற்கான ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க அரசு அனைத்து உதவிகளும் செய்து தரும். மேலும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பணியைத் திறம்படச் செய்து ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள 60 வயதைத் தாண்டிய அனைத்து முதியோருக்கும் முதியோர் உதவித்தொகை வீடு தேடிச் சென்று வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

கூட்டுறவு வங்கிகளின் 5 சவரனுக்கு குறைவாக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தொகை 5,000 கோடி ரூபாய் அரசு தள்ளுபடி செய்தது. மேலும் 12,41 கோடி ரூபாய் அளவுக்கு அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டி அதற்கான விதியை தமிழக முதல்வர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விவசாயிகள் பொதுமக்கள் துயரத்தை துடைத்து வருகிறார் தமிழக முதல்வர்" என்று அமைச்சர் பேசினார். ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சியின் இறுதியில்  காணை ஊராட்சி ஒன்றியம் பனைமலை பேட்டை ஊராட்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி 12 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்