
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியை வளர்க்க கொண்டுவரப்படவில்லை. இந்தியை கொண்டுவர உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக திணிக்காமல் கல்விக் கொள்கை மூலம் முலாம் பூசி திணிக்கிறார்கள். தாய்மொழியை வளர்க்கப் போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். தர்மேந்திர பிரதான் அவர்களே தாய்மொழித் தமிழை வளர்க்க எங்களுக்கு தெரியும். இந்தி மொழியால் தங்களுடைய தாய் மொழிகளை தொலைத்து விட்டு நிற்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் சாதி திட்டத்தின் ஆபத்து புரியும். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?

நீங்கள் வந்து தான் வளர்ப்பீர்கள் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை. ஒன்றிய அரசுக்கு நான் கடுமையாக எச்சரிக்கை விடுகிறேன் தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழர்களின் தனித்துவமான குணத்தை பார்க்க ஆசைப்படாதீர்கள். தமிழுக்கும்; தமிழ் நாட்டுக்கும்; தமிழ் இனத்திற்கு எதிரான எந்த செயல்பாடுகளும் நான் இருக்கிற வரைக்கும், திமுக இருக்கும் வரைக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரைக்கும் இந்தி மண்ணிற்குள் வர முடியாது. திராவிட மடல் அரசை பொருத்தவரை மக்கள் முன்னேற்ற ஒரு பக்கம் என்றால் அதற்கான தடைகளை உடைப்பது இன்னொருபக்கம் என்று இரு பாதை பாய்ச்சலை தமிழ்நாடு அரசு நடத்திக் கொண்டு வருகிறது. தடைகள் எந்த பக்கம் இருந்து வந்தாலும் அதை உடை எனப் பழகியவர்கள் நாங்கள். எனவே வெற்றிப் பாதையை தொடர்கிறோம். மக்களின் ஆதரவால் வெற்றி என்றென்றும் தொடரும்'' என்றார்.