Skip to main content

பாதங்களை போற்றி புகழ்பாட வேண்டாம் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்...! –மாநில அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி.கடிதம்

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றிவரும் தூய்மைப் (துப்புரவு) பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களின் மிக முக்கியக் கோரிக்கைகளான தூய்மைப் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் சுய உதவிக் குழு முறை உள்ளிட்ட அனைத்து வகையான தனியார் மய நடவடிக்கைகளைக் கைவிட்டு அரசே நேரடியாக மேற்கொள்ளக் கோருதல், பணிநிரந்தரம், மக்கள் தொகைக்கேற்ப பணியாளர்கள் நியமனம், வீட்டுவசதி, ஊதிய உயர்வு, சிறப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி" தமிழ்நாடு முதலமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மற்றும்  உள்ளாட்சி துறை செயலாளர் ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணை செயலாளரும் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தலைவருமான திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் MP கடிதம் எழுதியுள்ளார். அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது,

 

Don't sing the praises of the feet, fulfill the demands ...! - Communist MP for the state government


"தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள்,  பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள் தூய்மை பணியில் தொழிலாளர்களாக  தங்கள் உடல் நலத்தையும், உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அவர்களின் பங்கு, பணி குறிப்பிட்டு பாராட்டத்தக்கதாக இருந்ததை மத்திய, மாநில அரசுகள் நன்கறியும்.

அப்படிபணியாற்றுகின்ற துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களின் கால்களைக் கழுவியும், அவர்களை இறைவனுக்கு நிகராக போற்றிப் புகழ்ந்தும், பூமாரி பொழிந்ததையும் இந்த நாடு அறியும். போற்றிப் புகழ்பாடுகிற சம்பவங்கள் மட்டுமே அவர்களை கௌரவப்படுத்தாது. உண்மையில், மனப்பூர்வமாக துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்க வேண்டும் என்று மாநில அரசை வற்புறுத்துகிறேன்.

உண்மையில், அவர்கள் கால்களைக் கழுவுவதைக் காட்டிலும் உயர்ந்ததும், மேன்மையானதும் அவர்கள் முன்வைக்கிற நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் பொருத்தமான கௌரவிப்பாகும்.துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள் குடியிருக்கிற இடங்களிலும் பணியாற்றுகிற இடங்களிலும் அவர்கள் எதிர்கொள்கிற சிக்கல் நிறைந்த நெருக்கடியான அனுபவங்களில் இருந்து உருவான கோரிக்கைகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,

1) துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை ஒப்பந்த கூலிமுறை, சுய உதவிக் குழு முறை உட்பட எந்த வடிவத்திலும் தனியாருக்கு வழங்காமல் மாநில அரசே முழு பொறுப்பெடுத்து செயல்படுத்த வேண்டும். இதன் கீழ் வருகிற தொழிலாளர்கள் அனைவரையும் அரசுப்பணியாளர்களாக ஏற்க வேண்டும்.

 

ு2) தற்போது பணியாற்றி வருகிற துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உட்பட அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். அவர்களால் நிறைவேற்றப்பட்ட நிரந்தரப்படுத்தும் சட்டப்படி, 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியவர்களை நிரந்தர படுத்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

3) தூய்மைப் பணியாளர்கள் குடியிருந்து வருகின்ற காலனிகள் குடியிருக்கும் தகுதியற்ற வீடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். பணியிலுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் சொந்தமாக மாநில அரசு வீடுகட்டி கொடுத்து அவர்களுக்கு உரிமையாக்க வேண்டும்.

4) இன்றைய தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஏற்கனவே வரையறுத்துள்ள NORMS படி பணியிடங்களைத் தோற்றுவித்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

5) தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த 11-10-2017-ஆம் தேதிய அரசாணை எண்: 62-ன் படியான குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க வேண்டும்.

6) கரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிரந்தரம், தினக்கூலி, தூய்மை காவலர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக இரட்டைச் சம்பளம் வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மிகுந்த நம்பிக்கையோடும், எதிபார்ப்புகளோடும் உங்கள் முன்வைத்துள்ளேன். இந்தக் கோரிக்கைகள் உங்களால் நிறைவேற்றப்படுமென நான் நம்புகிறேன். மேலும் உங்கள் இசைவான நடவடிக்கைக்காக நான் காத்திருக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்