/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3343.jpg)
நாமக்கல் அருகே, அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் சென்னைக்கு தப்பி ஓடியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், வையப்பமலையைச் சேர்ந்தவர் கந்தசாமி. தையல்காரர். இவருடைய மகன், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அக். 13ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவனுக்கு, வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்துக்கொண்டு கந்தசாமி பள்ளிக்குச் சென்றார். அப்போது, பள்ளியிலேயே புத்தகப் பையை வைத்துவிட்டு, உடன் படிக்கும் ராசிபுரம் தொட்டிப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு மாணவனுடன் வெளியே சென்றுவிட்டது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த கந்தசாமி, மகனை பல இடங்களில் தேடினார். இந்நிலையில் அவருடைய மகனுடன் சென்ற மற்றொரு மாணவன், தனது தாய் பிரதிபாவுக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ''நானும் என் நண்பனும் சேலத்திற்குச் சென்றுவிட்டோம். இரண்டு நாள்கள் கழித்துதான் வருவோம். அதுவரை எங்களை தேட வேண்டாம்'' என்று கூறிவிட்டு, பேச்சைத் துண்டித்துவிட்டார்.
இதையறிந்து, இரு மாணவர்களின் பெற்றோரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர். சேலத்தில் பழைய, புதிய பேருந்து நிலையபகுதிகளில் தேடிப்பார்த்தும் ஒரு பலனும் இல்லை. அதன்பிறகு சூரமங்கலம் ரயில் நிலையம் சென்று காவல்துறையினரிடம் விவரங்களைத் தெரிவித்தனர். இது தொடர்பாக கந்தசாமி அளித்த புகாரின்பேரில் எலச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மாணவர்களின் புகைப்படங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, சென்னையில் அண்ணா சதுக்கம் அருகே இந்த இரு மாணவர்களும் சுற்றிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவர்களை அண்ணா சதுக்கம் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எலச்சிப்பாளையம் காவல்துறையினர், அண்ணா சதுக்கம் சென்று, அங்கிருந்த மாணவர்களை மீட்டுச்சென்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
எனினும், அவர்களாகவே சென்னை சென்றார்களா? பள்ளியில் இருந்து ஓட்டம் பிடித்ததற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)