ADVERTISEMENT

மதுக்கடையை திறக்காதே! இல்லங்களில் போராடும் விடுதலை சிறுத்தைகள்!!

06:26 PM May 06, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா வைரஸ் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தமிழக அரசு நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதுபோல் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனும், தமிழகத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வீடுகளிலிருந்து மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ADVERTISEMENT


அதன் அடிப்படையில் தேனி மொக்கைய கவுண்டன்பட்டியில் உள்ள பாலநகர் பகுதியில் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல் மற்றும் அப்பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் தங்கள் வீடுகளின் முன் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேப்பர் சார்ட் போர்டுகளில் "திறக்காதே திறக்காதே மதுக்கடையை திறக்காதே" "கொல்லாதே கொல்லாதே பொது மக்களை கொல்லாதே" "பரப்பாதே பரப்பாதே கரோனவை பரப்பாதே" என்ற மூன்று வாசங்களை முன்வைத்து வீடுகளுக்கு வெளியே நின்று தங்கள் கண்டனக் குரலை வெளிப்படுத்தினார்கள்.

அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, போடி, கம்பம், கடமலைகுண்டு, சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, உத்தமபாளையம், கூடலூர் உள்பட சில பகுதிகளில் இருக்கக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து குடும்பங்களுடன் நின்று கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். அதைக் கண்டு பொதுமக்களும்கூட விடுதலை சிறுத்தை கட்சிகளின் கண்டன குரலுக்கு ஆதரவாக ஆங்காங்கே குரல் கொடுத்து வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT