Advertisment

'பொய் சொல்லாதீர்கள்...'-டாஸ்மாக் விவகாரத்தில் நீதிமன்றம் சரமாரி கேள்வி

High Court

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அதேபோல் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

Advertisment

இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டாஸ்மாக் விவகாரத்தில் மேற்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். அதேபோல டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'இந்த வழக்கில் ஒரு பெரிய கோரிக்கையை அரசு தரப்பு முன் வைத்திருக்கிறார்கள். அரசினுடைய அனுமதி பெறாமல் எந்த சோதனையும் நடத்தக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறீர்கள். பொத்தம் பொதுவாக இப்படி ஒரு கோரிக்கையை வைக்க முடியாது. எனவே புதிதாக திருத்தம் செய்த மனுவை தாக்கல் செய்யுங்கள்' என அறிவுறுத்தினர்.

டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சோதனை நடத்தவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு உரிய காரணங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளை அமலாக்கத்துறை அடைத்து வைத்திருக்கிறது. இதனால் அதிகாரிகளின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நள்ளிரவு வரை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்' என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

எதற்காக டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்தீர்கள் என தெரிவித்திருக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நள்ளிரவு சோதனை நடத்தப்படவில்லை. மாலை வரை சோதனை நடத்தப்பட்டது. சில நேரங்களில் சிறிது தாமதம் ஆகி இருந்திருக்கலாம். ஆனால் நள்ளிரவு வரை சோதனை நடத்தப்படவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்' என அமலாக்கத்துறை தெரிவித்தது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ''பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகி இருக்கிறது'' என சுட்டிக்காட்டினர். அமலாக்கத்துறை அதிகாரத்தை செயல்படுத்திய விதத்தை தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம். இது சம்பந்தமாக அமலாக்கத்துறை மார்ச் 25 க்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை இதில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

highcourt TNGovernment TASMAC
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe