Advertisment

“இந்திக்கு தாய்ப்பால்; மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பாலா” - அமித்ஷாவுக்கு முதல்வர் எச்சரிக்கை

'Don't let other languages ​​go wrong

ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisment

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

அறிக்கையில் “மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி. ஒரே மதம், ஒரே உணவு. ஒரே கலாச்சாரம் என நிறுவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் (11-ஆவது தொகுதி) ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது? மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு. இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?

'பாரத் மாதா கீ ஜே' என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கிக் குரல் எழுப்பிக் கொண்டே, இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது. இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு. இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Amitsha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe