Don't believe rumours police warning

தமிழகத்தில் குழந்தைகளைக் கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வட மாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் எனப் பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனைச் சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளைக் கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இத்தகைய சூழலில் கிருஷ்ணகிரி மாவட்டம் செம்மடமுத்தூரில் குழந்தையை கடத்தினார்கள் எனக் கூறி வட மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் 4 பேர்பொதுமக்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பரவும் தகவல் வதந்தி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி.தங்கதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “செம்மடமுத்தூரில் குழந்தையை கடத்தியதாகக் கூறி வட மாநிலத்தவர் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக தெரியவந்தால் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். வதந்திகளை நம்பி பொதுமக்கள் தேவையில்லாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இதனை மீறியும் தாக்குதல் சம்பவம் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.