ADVERTISEMENT

‘அறநிலையத்துறையின் உள்நோக்கத்திற்கு கருவியாக இருக்க வேண்டாம்’ - தீட்சிதர்கள் பரபரப்பு கடிதம் 

11:08 AM Nov 18, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாகப் பிரம்மோற்சவம் நடைபெறவில்லை என்றும் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை, நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் ஏன் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக் கடிதம் அனுப்பி கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நடராஜர் கோவில் தீட்சிதர்கள், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர்களுக்குக் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர். அதில் நடராஜர் கோவிலில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி இருந்து வருகிறது என்றும் நடராஜர் கோவில் நிர்வாகம் மற்றும் கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் பூஜை வழிபாடுகளை செய்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவித பாகுபாடும் இன்றி கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்கள்.

நடராஜர் கோவிலில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் எந்த உற்சவங்கள் நடைபெற வேண்டும் என்பதைப் பற்றி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது என்பது அறங்காவலர்களுக்குத் தெரியும். அதன்படியே உற்சவம் நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளை இந்து அறநிலையத்துறை நன்கு தெரிந்து கொண்டு தற்போது நடராஜர் கோவிலில் உள்ள அமைதியான தரிசன முறைக்கு இடையூறுகளை விளைவிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றம் மூலம் நன்கு ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்ப்பை மீறி கோவில் நிர்வாகத்திற்கும் பக்தர்களின் அமைதியான தரிசனத்திற்கும் இடையூறு செய்யும் நோக்கில் சட்டவிரோதமாகத் தங்களை வற்புறுத்தி இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்து அறநிலையத்துறையின் உள்நோக்கத்திற்கு தாங்கள் கருவியாக இருக்க வேண்டாம் என்பதையும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT