Advertisment

உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

Don't ask for opinions without proper compensation - pmk founder Ramdas insists

Advertisment

'அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குஅரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்காமல்,கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்டுவது குறித்து கருத்துக் கேட்கவும், அதைத் தொடர்ந்து சுரங்கம் வெட்டவும் ஆலை நிர்வாகம் துடிப்பதுகண்டிக்கத்தக்கது' எனபாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக புதுப்பாளையம், காட்டுப்பிரிங்கியம், வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, அஸ்தினாபுரம் ஆகிய 5 கிராமங்களில் 300 உழவர்களிடமிருந்து1400 ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த 1993-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், அதற்காக ஏக்கருக்கு ரூ.25,000 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது. அது போதுமானதல்ல என்று கூறி, அரியலூர் நீதிமன்றத்தில் உழவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் ஏக்கருக்கு ரூ.1.3 லட்சம் இழப்பீட்டை, 1993 ஆம் ஆண்டு முதல் வட்டியுடன் சேர்த்து வழங்க ஆணையிட்டது. அதை வழங்காத அரசு சிமெண்ட் ஆலை, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சிமெண்ட் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருள் சுண்ணாம்புக்கல் ஆகும். அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுரங்கம் அமைக்கும் நோக்குடன் அது குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த அரசு சிமெண்ட் ஆலை திட்டமிட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பலமுறை அந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் 28-ஆம் நாள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அதிகாரிகள்திட்டமிட்டுள்ளனர். இது எந்த வகையிலும் நியாயமற்றது.

Advertisment

சிமெண்ட் ஆலையின் தொடர் செயல்பாட்டுக்காக சுண்ணாம்புக்கல் தேவை என்று அரசும், ஆலை நிர்வாகமும் நினைத்தால்சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேசி நீதிமன்றம் ஆணையிட்டவாறு அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும்வரை காத்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல்நில உரிமையாளர்களை மிரட்டி, நிலங்களில் சுரங்கம் அமைக்க முயல்வது நியாயமற்றது.இதை அனுமதிக்க முடியாது.

உழவர்கள் நலன் தொடர்பான இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். நீதிமன்றம் ஆணையிட்டவாறுகையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய இழப்பீட்டை வட்டியுடன் வழங்கி விட்டு, அதன் பின்னர் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Ariyalur Ramadoss pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe