Advertisment

‘ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டை அனுமதிக்க வேண்டாம்!’ - தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தீர்மானம்!

sterlite palnt incident thoothukudi district collector

ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசே ஏற்று நடத்தலாமா? என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டபோது, கூட்டம் கடுமையாக எதிர்த்தது.

Advertisment

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (23/04/2021) நடைபெற்றது.

Advertisment

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று (22.04.2021) தெரிவித்தது.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது. இதனையடுத்து, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட லாரிகளில் தேவையுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இருப்பினும், மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு, மே மாதம் மக்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் தயாரித்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க அனுமதி தருமாறு ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தது. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‛நாள் ஒன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக் கூடத்தில் தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்ப தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துசார் மேத்தா, ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என வாதிட்டார். அவரது பதில் மனுவில், “ஆக்ஸிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம். நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தரலாம்' எனக் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து,ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் தற்போது நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் எழுப்ப, எதிர் தரப்பினருக்கும் அவர்களுக்கும் ஆட்சியர் முன்னிலையில் கைகலப்பானது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டாம் என கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.“அரசே ஏற்று நடத்தலாமா?”என ஆட்சியர் கேட்டதற்கும் அக்கூட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளிப்பட, கூட்டத்தை முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கிளம்பினார்.

இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

District Collector incident Sterlite plant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe