Advertisment

"எனக்கு துன்பம் தருவது போல் செயல்படாதீர்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! 

publive-image

Advertisment

சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் இன்று (09/10/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதனை, உட்கட்சித் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி பொதுக்குழுவில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

அதேபோல், தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் துரைமுருகன், கட்சியின் பொருளாளராக இரண்டாவது முறையாக, கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சியின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

publive-image

தி.மு.க.வின் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 5,000- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு மதிய உணவு விருந்துக்கும் கட்சித் தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எனக்கு துன்பம் தருவது போல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக் கூடாது. உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது; மூன்றாவது கண்ணாக செல்போன் வந்துவிட்டது. மழையே பெய்யவில்லை என்றாலும், என்னைத்தான் குறை சொல்வர்; மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வர். நான் தலைவரானது முதல் தி.மு.க.வுக்கு ஏறுமுகம் தான்; சட்டமன்ற தேர்தல் உள்பட பல தேர்தல்களில் வென்றுள்ளோம்.

publive-image

தி.மு.க. பழுத்த மரம் மட்டுமல்ல, கல்கோட்டை; வீசப்பட்ட கற்களை வைத்து தி.மு.க. என்ற கல்கோட்டையை வலுப்படுத்தியுள்ளோம். சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க., சிதைந்துக் கிடக்கின்ற அ.தி.மு.க. வரும் தேர்தலில் தி.மு.க.வை அவமானப்படுத்தப் பார்க்கும். அ.தி.மு.க. கோஷ்டி பூசலை பா.ஜ.க. தனக்கு சாதமாகப் பயன்படுத்தி வருகிறது. மதம், ஆன்மீக உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமிழகத்தில் அரசியல் நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. அரசியலையும், ஆன்மீகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால் மூச்சுத் திணறுகிறது." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe