Skip to main content

கொள்ளையர்களை விரட்டி விரட்டி துரத்திய நாய்கள்! 

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

The dogs chased away the robbers!

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு பகுதிகளில் அண்மை நாட்களாக பைக், சைக்கிள்கள் திருட்டு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் களக்காடு கோவில்பத்து ஏரியாவில் இரவில் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நடமாடி இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சில வீடுகளைக் குறிவைத்து கொள்ளைக்காக வீட்டின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அது சமயம் அந்தப் பக்கமாகத் திரிந்த தெரு நாய்கள் சத்தம் கேட்டு, அவர்களைத் துரத்தி துரத்தி விரட்டியதால் கொள்ளையடிக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன. இரவில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடுவது, அவர்களைத் தொடர்ந்து நாய்கள் விரட்டும் காட்சிகள் அப்பகுதியில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் கோவில்பத்து நகரில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் இது வரையிலும் கண்டறியப்படவில்லை.


அதேபோல், தென்காசி மாவட்டத்தின் ஆவுடையனூரில் வயதான ஆசிரியத் தம்பதியரைத் தாக்கி 150 சவரன் நகைகள், மற்றும் 10 லட்சம் பணம் என முகமூடி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரவுடிகளின் அட்ராசிட்டி; தொழிலாளி வெட்டிக் கொலை - ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
shoot on rowdy in nellai
சந்துரு- பேச்சித்துரை

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதி அருகே உள்ளது தென்திருப்புவனம் கிராமம். இங்குள்ள காளி என்பவரின் மகன் 23 வயதேயான பேச்சித்துரை. நேற்றைய தினம் மாலை பேச்சித்துரையும், தன் நண்பரான கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சந்துருவும், மதுவுடன் கஞ்சாவையும் சேர்த்தடித்தவர்களுக்குப் போதை உச்சந்தலைக்கு ஏறியிருக்கிறது.

போதையில் கண்மண் தெரியாமல் சாலையில் சென்ற பேச்சிதுரையும், சந்துருவும் வீரவநல்லூரையடுத்த வெள்ளங்குளியில் சிலருடன் தகராறு செய்து மிரட்டியுள்ளனர். பின்பு நெல்லை - அம்பை நெடுஞ்சாலையில் வெள்ளாங்குழிப் பகுதியில், பால வேலையில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களிடம் வம்பிற்கு இழுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். வாய்க்கு வந்தபடி பேசி வீண் தகராறு செய்தவர்கள் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைக்க காரில் வந்தவர்கள் அலறித் தப்பியிருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

பின்பு மறுபடியும் பாலக்கட்டுமானப் பக்கம் சென்றவர்கள் மீண்டும் தொழிலாளர்களிடம் வம்புத் தகராறு செய்ய, அங்கு பணியிலிருந்த மேஸ்திரியான விருதுநகர் மாவட்டம் சாத்துரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவர்களைக் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமான பேச்சித்துரையும் சந்துருவும் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியிருக்கிறார்கள். இதில் கருப்பசாமியின் பின் தலையில் ஆழமான வெட்டு விழ ரத்தம் பீறிட கதறி வீழ்ந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டுச்சம்பவம் நடக்கும்போதே அதனைத் தடுக்கப் பாய்ந்த சக தொழிலாளருமான மூலச்சி கிராமத்தின் வெங்கடேஷ் என்பவரை அரிவாளால் தாக்கியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியிருக்கிறார்கள்.

வெள்ளாங்குழி வழியாகச் சென்ற இருவரும் எதிரேவந்த வீரவநல்லூர் செல்லும் அரசுப் பேருந்தை அரிவாட்கள் முனையில் நிறுத்தியவர்கள் கண்ணாடியை உடைத்து டிரைவரையும் வெளியே இழுத்துப் போட்டு வெட்ட முயன்றுள்ளனர். அப்போது மிரண்டு போன பயணிகளில் சிலர் சுதாரித்துக் கொண்டு அதனைத் தடுக்க முயன்றிருக்கிறார்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடிய டிரைவரை இரண்டு பேர்களும் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை அரிவாட்களால் ஓங்கிய படியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். மாலை நேரம் அந்தச் சாலையே இதனால் பதட்டமாகியிருக்கிறது. ஆனாலும் வெறியில்  கத்தியபடியே இருவரும் தாமிரபரணி ஆற்றுக்கரையை நோக்கிப் போன தகவல் வீரவநல்லூர் போலீசுக்குத் தெரியவர, தாமதம் செய்யாமல் காவலர் செந்தில்குமாரும், மற்றொரு காவலரும் பைக்கில் அவர்களைப் பிடிப்பதற்காக விரைந்தனர்.

ஆற்றாங்கரையோரம் அவர்களை போலீசார் இருவரும் மடக்கிபிடிக்க முயற்சி செய்த போது, எதிர்பாராத வகையில், இருவரும் மூர்க்கத்தனமாக காவலர் செந்தில்குமாரை மடக்கி அரிவாளால் அவரின் கையை வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். சக காவலர் உட்பட சிலர் காயமடைந்த காவலர் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

shoot on rowdy in nellai

காவலர் வெட்டப்பட்டது ரவுடிகளின் அட்டகாசம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசனுக்குத் தெரியவர உடனடியாக அவர் தன்னுடைய தனிப்படையை அனுப்பியிருக்கிறார்.

தாமிரபரணிக் கரையில் பதுங்கிய அவர்களை தனிப்படையினர் தேடி சலித்தெடுத்ததில் அவர்கள் முக்கூடல் பக்கமுள்ள சாலையினருகேயுள்ள மருதூர் வாழைத் தோப்பில் பதுங்கியிருந்தது தெரியவர அவர்களை தனிப்படை ரவுண்ட்அப் செய்திருக்கிறது. அவர்களைப் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பியோடியிருக்கிறார்கள். விடாமல் துரத்திய தனிப்படையினர் எச்சரித்தும் அவர்கள் தப்பியோட பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள். இதில் அவனது சகா சந்துரு லாவகமாகத் தப்பியோடியிருக்கிறான். ரவுடி பேச்சித்துரையை மீட்ட போலீசார் முக்கூடலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அங்கு அவருடைய காலில் உள்ள குண்டு அகற்றப்பட்டிருக்கிறது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு பேச்சித்துரையை அனுப்பிவைத்திருக்கின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.யான சிலம்பரசன். தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். வெள்ளாங்குழியில் காரை மறித்து தகராறு செய்தவர்கள் கருப்பசாமி என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஸ்ரீ பத்மநல்லூர் பக்கம் பொது மக்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள் தற்காப்பிற்காக காவலர், பேச்சித்துரையின் காலில் சுட்டுப் பிடித்தனர். சந்துருவைக் கைது செய்திருக்கிறோம் என்றார் எஸ்.பி.

shoot on rowdy in nellai

இளவயதான பேச்சித்துரையும், சந்துருவும் நண்பர்கள். வேலையற்ற இவர்களிடம் போதைப் பழக்கம் தொற்றியிருக்கிறது. மதுவுடன் சேர்த்து கஞ்சா அடிக்கும் பழக்கம் ரெகுலராம். அதிலும் கஞ்சாவைக் கசக்கி விட்டால் பேச்சித்துரைக்கு போதை, உச்சிமண்டைக்கு ஏறி மூளையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடுமாம். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி, சதைகளில் போதை ஏறி சைக்கோவாகவே மாறிவிடுவானாம் இதனால் தான், என்ன செய்கிறோம் என்று அவனுக்கே தெரியாமல் போய்விடுமாம். அந்த லெவலுக்குப் போனவன் வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது அடிதடி என்றாகி கொலை வரை போயிருக்கிறது. முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் காவல் நிலையங்களில் பேச்சித்துரை மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு வழக்காகி காவல் நிலைய ரவுடி பேனலிலும் இடம் பிடித்துள்ளான். இந்த அடாவடி காரணமாக அடிக்கடி அரசு விருந்தாளியாகப் போய்வரும் ரவுடி பேச்சிதுரையின் மீது குண்டாசும் பாய்ந்திருக்கிறது என்கிறார் அந்தப் பகுதியின் மூத்த காவலர் ஒருவர்.

ரவுடி பேச்சித்துரையைப் போன்று இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி முக்கூடல், வீரவநல்லூர் மற்றும் சேரன்மகாதேவி சுற்றுப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்படி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள் பகுதிவாசிகள்.

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.