Dog saved his family from snake

Advertisment

வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்கும்போது ஏதோ ஒரு கட்டத்தில் தங்களை வளர்க்கும் குடும்பத்தைக் காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமாக்களில் இந்தக் காட்சிகளை அதிகம் கண்டிருப்போம். அதே போல ஒரு காட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள ஜெயந்த் என்பவர் தனது வீட்டில் பல வருடங்களாக வெள்ளை நிற நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். குடும்பத்தினர் வெளியே சென்றாலும் அவரது வீட்டை வெள்ளை நாய் பாதுகாத்து வந்தது. தற்போதைய மழையில் ஜெயந்த் வீட்டைச் சுற்றி புல், செடி கொடிகள் வளர்ந்துள்ள நிலையில் புதருக்குள்ளிருந்து வந்தஒரு நல்லபாம்பு ஜெயந்த் வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளது. இதைப் பார்த்த வெள்ளை நாய், தன்னை வளர்க்கும் குடுப்பத்தினரை காப்பாற்ற பாம்போடு சண்டையிட்டு பாம்பைதுடிக்கத்துடிக்க கடித்துக் கொன்ற பிறகு அதே பகுதியில் வாயில் நுரை தள்ளி நாயும் செத்துக் கிடந்தது.

இத்தனை வருடங்கள் தனக்கு உணவளித்து செல்லமாக வளர்த்த குடும்பத்தினரை காக்க தன் உயிரையும் துச்சமாக நினைத்து பாம்பை கடித்துக் கொன்ற நாயைப் பார்த்து கண் கலங்கிய ஜெயந்த் குடும்பத்தினர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். இது நாய் இல்லை, எங்கள் குடும்பத்தைக் காக்க வந்த தெய்வம் என்று கலங்குகிறார்கள் ஜெயந்த் குடும்பமே.