Skip to main content

நாயை நாய் எனச் சொல்லியதற்கு கொலை; திண்டுக்கல்லில் பரபரப்பு

 

 dog incident;stir in Dindigul

 

வளர்ப்பு நாயால் ஏற்பட்ட மோதலில் பக்கத்து வீட்டு முதியவரை நாய் உரிமையாளர் ஒருவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்துள்ள மரவப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது பக்கத்து வீட்டார் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயை வளர்த்து வந்தனர். இந்த நிலையில், ராயப்பனின் மகன் மற்றும் மகளின் குழந்தைகள் பொங்கல் விடுமுறை காரணமாக ஊரிலிருக்கும் வீட்டுக்கு வந்துள்ளனர். பக்கத்து வீட்டில் இருக்கும் நாயானது பல நேரங்களில் கட்டிப்போடப்படாமல் இருப்பதால் வீட்டிலிருந்து எகிறிக் குதித்து வெளியே வந்து அக்கம்பக்கத்தினரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. நேற்று ராயப்பனின் பேரக்குழந்தைகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கிற பொழுது அந்த நாய் குரைத்துள்ளது. இதைப் பார்த்த ராயப்பன் “அந்தப் பக்கம் போய் விளையாடாதீர்கள். அங்கு இருக்கின்ற நாய் கடித்து விடும்” எனக் குழந்தைகளை எச்சரித்துள்ளார்.

 

நாய் என ராயப்பன் சொன்னதைக் கேட்டுக்கொண்ட நாய் உரிமையாளர் வின்சன்ட் 'குழந்தையாக நினைத்து வளர்த்து வரும் நிலையில், எப்படி நீ நாய் என்று சொல்லலாம்' என ராயப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த வின்சன்டின் தம்பி டேனியல் ராஜா என்பவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து முதியவர் ராயப்பனை சரமாரியாகக் குத்தினார். தாக்குதலில் படுகாயம் அடைந்த ராயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவான டேனியல் ராஜாவை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !