Dog distemper injection for girl who was treated for a cold; Bustle in Cuddalore

Advertisment

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி தொந்தரவுக்காக மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு நாய்க் கடிக்கான ஊசி செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அடுத்த கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் சாதனா (13). எட்டாம் வகுப்பு படித்து வந்த சாதனாவிற்கு சளி தொந்தரவு இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தந்தை கருணாகரன் சாதனாவை அழைத்து வந்தார். அங்கிருந்த மருத்துவர் சாதனாவை பரிசோதனை செய்து பிறகு ஊசி மற்றும் மாத்திரை எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையின் மருந்தகத்தில் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஊசி போடும் பொழுது அங்கிருந்தசெவிலியர் மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டை வாங்கி பார்க்காமல் ஊசி போட்டுள்ளார்.

"சீட்டைப் பார்க்காமலே ஊசி போடுகிறீர்களே. என்ன ஊசி?" எனசெவிலியரிடம் தந்தை கேட்டதற்கு, “நாய்க் கடி ஊசி” எனத்தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கருணாகரன், “என் மகளுக்கு சளி தொந்தரவுக்காக வந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். “தெரியாமல் தவறு நடந்து விட்டது” என செவிலியர் தெரிவித்த நிலையில், சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சிறுமிக்குமருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையில் அலட்சியமாக இருந்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தந்தை புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குநர், பணியில் அலட்சியமாக செயல்பட்ட செவிலியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.