Skip to main content

இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி சிறுவனை துரத்தி துரத்தி கடித்த நாய்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
A dog chased and bit a school boy on a two-wheeler

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் கியூபா மசூதி பகுதியைச் சேர்ந்தவர் சனாவுல்லா.இவரது மகன் முஹம்மத்ஷேக். அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை என்பதால் வாத்திமனை பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் விளையாட தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாத்திமனை பகுதியில் வீதியோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை அருகில் இருந்த நாய்களுள் ஒன்று முஹம்மத்ஷேக்கை துரத்தி துரத்தி கடிக்க முற்பட்டதில் அதிர்ச்சியடைந்த மாணவன் வாகனத்தை கீழே விட்டு ஓட முயன்றபோது கால் பகுதியில் கடித்து குதறியது.

வலியால் அந்த மாணவன் கத்தி கதற அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும் நாய் ஓடிவிட்டது. காயமடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுத்துச் செல்லாமல் வீதியோரம் அதிக அளவில் குப்பை சேருவதால் அங்கு நாய்கள் அதிகமாக வருகின்றன. சாலையில் போவோர் வருவோரை கடிக்கின்றன.

நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. கடந்த காலங்களில் தெரு நாய்களுக்கு ஆபரேஷன் செய்து வைப்பர். இப்போது அந்த நடைமுறையும் இல்லை. நீதிமன்றத்தில் தெரு நாய்களை பிடித்து ஆபரேஷன் செய்யக்கூடாது, அதை கொல்லக்கூடாது என விலங்குகள் நல அமைப்பு ஒரு உத்தரவை வாங்கி வைத்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அடிக்கடி நாய்களால் கடிபட்டு பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதனால் அரசு முயற்சி எடுத்து அந்த உத்தரவை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

சார்ந்த செய்திகள்